சென்ற வருடத்தின் இறுதியில் இருந்து உலக அளவில் மிகப் பெரிய பேசு பொருளாகி வருவது செயற்கை நுண்ணறிவு பற்றிய செய்திகள் தான். குறிப்பாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்த பின் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரும் மாறுதல்கள் ஏற்பட துவங்கியுள்ளன. மனிதர்கள் ஒன்றிணைந்து செய்யக்கூடிய பல்வேறு வேலைகளை ஒரே ஒரு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செய்து முடித்து விட முடியும் என்று நிலை உருவாகியுள்ளது. சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு வித கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இவற்றினால் பல்வேறு மனிதர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் வாய்ப்புகள் உண்டு எனவும் பலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
குறிப்பாக சாட் ஜி பி டி தொழில்நுட்பமானது மேலே கூறிய கருத்தை உண்மையாக்கும் வகையிலேயே தற்போது வரை செயல்பட்டு வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களைப் போலவே பதில் அளிப்பது, முதல் கடிதங்கள் எழுதுவது, கட்டுரைகள் எழுதுவது, புதிய திட்டங்களை வகுத்துக் கொடுப்பது, இசையமைப்பது, கவிதை எழுவது போன்ற அனைத்து விதமான செயல்களையும் அது செய்கிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பற்றி பேசிய ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பலரும் இந்த செயற்கை நுண்ணறிவானது எதிர்காலங்களில் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பறித்து விட கூடும் என்று அச்சம் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் செயற்கை நுண்ணறிவால் மேலாண்மை துறையில் இருக்கும் பணியாளர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்க முடியாது.
அதே சமயத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் மேலாண்மை அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தாத அதிகாரிகளுக்கு பதிலாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உண்டு” என்று அவர் கூறியுள்ளார். இவரின் கூற்றை வைத்துப் பார்க்கையில் எதிர்காலங்களில் மக்கள் பணியாற்றும் முறையில் முற்றிலும் மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்புதான் ஐபிஎம்-ன் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா அவர்கள், அடுத்த ஐந்து வருடங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களின் பல்வேறு வேலைகள் பறிக்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஐந்து வருடங்களில் தற்போது இருக்கும் மொத்த வேலை வாய்ப்புகளில் 30 சதவீதத்தை செயற்கை நுண்ணறிவுகள் நிரப்பிவிடும் என்று அவர் கூறுகின்றார்.
ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஐபிஎம் நிறுவனம் : சமீபத்தில் தான் ஐபிஎம் நிறுவனமானது ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு அந்த நிறுவனத்தின் குறிக்கோளான பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்ட அந்த நிறுவனம் தவறிவிட்டது. பல்வேறு மாற்றங்களை செய்தாலுமே 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே அந்நிறுவனத்தால் எட்ட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்தாண்டின் நான்காவது கால் இறுதியில் அந்நிறுவனத்தின் வருவாய் ஆனது 5.5% அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.