ஸ்மார்ட் போனில் பலருக்கும் சார்ஜிங் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்றுதான். ஏனெனில் மொபைலின் சார்ஜிங் திறனானது பல்வேறு வித காரணிகளால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சார்ஜ் ஏறாமல் இருப்பது அல்லது மிகவும் மெதுவாக சார்ஜ் ஏறுவது போன்ற பிரச்சனைகள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்துவோரிடையே மிகவும் அதிக அளவில் உள்ளது.
இதைத் தவிர ஆப்பிள், சாம்சங், ஹவாய் மற்றும் பல இதர நிறுவனங்களின் மொபைல்களிளும் மிகவும் மெதுவாக சார்ஜ் ஏறும் பிரச்சனை ஏற்படுகிறது. சிலர் தமது மொபைலில் சார்ஜிங் பிரச்சனை வந்தாலே மொபைலை மாற்றுவது குறித்து யோசிக்க துவங்கி விடுவார்கள். ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு இது மிகப்பெரிய பிரச்சினை அல்ல புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் வீட்டிலேயே மிகவும் எளிய வழிமுறைகளை பின்பற்றி நம்மால் இந்த சார்ஜிங் பிரச்சனையை சரி செய்ய முடியும். அதற்கு முதலில் நமது போன் ஏன் சார்ஜ் ஏறவில்லை என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
சார்ஜ் ஏறாமல் இருப்பதற்கான காரணம் என்ன ? : நாம் பயன்படுத்தும் போனில் சார்ஜிங் பிரச்சனை ஏற்படுவதற்கு பல்வேறு வித காரணங்கள் இருக்கின்றன. சார்ஜிங் கேபிள், சார்ஜர், சாக்கெட் அல்லது அடாப்டர் குறைபாடு போன்ற டெக்னிக்கல் காரணங்களும், இதை தவிர சார்ஜிங் போர்ட்டில் உள்ள தூசு மற்றும் அழுக்கு ஆகியவையும் போன் சார்ஜ் பெறுவதில் பிரச்சனையை உண்டாக்கலாம். சில சமயங்களில் நமது மொபைலில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள செயளிகளினாலும் சார்ஜிங் ப்ராசஸ் தடை செய்யப்படலாம். இதைத் தவிர சில மொபைல்களில் சாப்ட்வேர் அப்டேட்டை சரிவர செய்யாமல் இருக்கும்போது சார்ஜிங் பிரச்சினை ஏற்படுவது இயல்பானது.
அந்த வகையில் மொபைல் போன் சார்ஜிங் பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களை பற்றி இப்போது பார்ப்போம். பெரும்பாலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் தான் சார்ஜிங் பிரச்னை ஏற்படுகிறது. சேதமடைந்த பவர் கார்ட், பழுதடைந்த ஃபோன், அழுக்கு மற்றும் தூசுக்கள் நிறைந்த சார்ஜிங் போர்ட், மூன்றாம் தரப்பு செயலிகள், அதிக வெப்பம்.
எவ்வாறு சரி செய்வது ? : ஒருவேளை உங்களது மொபைலில் சார்ஜிங் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் உங்களது சார்ஜிங் கேபிளை நன்றாக ஆராய வேண்டும். எங்கேயும் சேதம் அடைந்துள்ளதா? அந்த ஒயரில் ஏதேனும் கிழிந்துள்ளதா ஆகியவற்றை நன்றாக சோதனை செய்து கொள்ள வேண்டும். முடிந்தால் இதே சார்ஜரை பயன்படுத்தி வேறு ஒரு மொபைல் போனை சார்ஜ் போட்டு வேலை செய்கிறதா என்பதை பார்க்கலாம்.வேறு போனில் சார்ஜிங் பிரச்சனை ஏற்படவில்லை எனில் உங்களது ஃபோனில் பிரச்சனை இருக்க வாய்ப்புகள் உண்டு. அதை உறுதிப்படுத்த வேறு ஒரு சார்ஜிங் கேபிளை பயன்படுத்தி உங்களது ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து பார்க்கலாம்.
மேலும் வேறு ஏதேனும் அவுட்லெட்டில் உங்களது சார்ஜரை சொருகி போன் சார்ஜ் ஏறுகிறதா என்பதை சோதனை செய்யலாம்.ஏனெனில் பொதுவாகவே வீடுகளில் அவ்வபோது சில குறிப்பிட்ட சார்ஜிங் பாய்ண்டுகளில் மின்சார தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை நீங்கள் யூஎஸ்பி கேபிள் மூலம் உங்களது கணினியில் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் சார்ஜிங் செய்ய முயற்சி செய்தால் தேவையான மின்சாரம் கிடைக்காமல் போக வாய்ப்புகள் உண்டு. எனவே சாதாரண அவுட்லெட்டில் சார்ஜரை சோதனை செய்வது நல்லது.
சார்ஜிங் போர்ட்டை சுத்தம் செய்ய வேண்டும் : உங்களது சார்ஜிங் கேபிள் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை பயன்படுத்தி மற்ற டிவைஸுகளை உங்களால் சார்ஜ் செய்ய முடிகிறது எனில் உங்கள் போனில் இருக்க வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக சார்ஜிங் போர்டில் உள்ள அழுக்கு மற்றும் தூசுக்களின் காரணமாக பெரும்பாலான போன்களில் சார்ஜிங் பிரச்சனையானது ஏற்படுகிறது.எனவே அந்தச் சார்ஜிங் போர்ட்டை முடிந்த அளவு சுத்தம் செய்து தூசுக்கள் முழுவதும் நீக்கிய பிறகு மீண்டும் சார்ஜ் செய்ய முயற்சி செய்யலாம். சில சமயங்களில் சார்ஜிங் போர்ட்டில் ஆக்ஸிடேஷன் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்தால் உங்களால் மீண்டும் சார்ஜ் போட முடியாமல் போக வாய்ப்புகள் உண்டு. இதற்கு ஒரே வழி போனை மாற்றுவது அல்லது சார்ஜிங் போர்ட்டை மாற்றுவது தான்.
வயர்லெஸ் சார்ஜர் பயன்படுத்தலாம் ; உங்களது ஃபோனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருந்தால் வயர்லெஸ் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஆகிறதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம். மேலும் இது ஒரு தற்காலிகமான தீர்வாகத்தான் இருக்க முடியுமே தவிர நீண்ட கால அடிப்படையில் இது பல சிரமங்களை கொடுக்கும். ஒருவேளை வயர்லெஸ் சார்ஜரை பயன்படுத்தியும் உங்கள் போன் சார்ஜ் ஏறவில்லை எனில் அதன் பேட்டரியில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.
போனை ரீஸ்டார்ட் செய்வது : சில சமயங்களில் போனில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனைகள் நாம் போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் சரியாகிவிடும். குறிப்பாக நாம் மிகவும் சீரியஸாக நினைக்கும் ஹார்டுவேர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட எளிதான ரீ ஸ்டார்ட் மூலம் சரி செய்து விடலாம். அதுபோலவே போனை முழுவதுமாக சுவிட்ச் ஆப் செய்வதும் பேட்டரியை நன்றாக சார்ஜ் செய்ய உதவும்.
பேட்டரி முழுவதும் தீர்ந்து போய் இருக்கலாம் : சில சமயங்களில் நமது போனின் பேட்டரிக்கு மிகவும் குறைந்தபட்ச சக்தியாவது ஃபோனை ஆன் செய்வதற்கு தேவைப்படும். பொதுவாகவே நமது பேட்டரியின் சக்தியானது முழுவதும் காலியாவதற்கு முன்னதாகவே ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும். இதன் காரணமாக அடுத்த முறை அவசரகதியில் நீங்கள் போனை ஆன் செய்வதற்கு சிறிது சக்தி மீதம் இருக்கும்.உங்கள் போன் முழுவதுமாக பேட்டரி திறனை இழக்கும் போது நீங்கள் சார்ஜ் போட்டாலும் கூட அதற்கான எந்த வித மாறுதல்களும் உடனடியாக போனில் தோன்றாது. எனவே உங்கள் ஃபோன் சார்ஜ் ஏறுவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும் கூட சிறிது நேரம் போனை சார்ஜில் போட்டு வைப்பது கை கொடுக்கலாம்.
ஆண்ட்ராய்டு போனில் சார்ஜிங் பிரச்சினையை எவ்வாறு சரி செய்வது? : மொபைல் போனில் சார்ஜிங் போர்டில் அழுக்கு தூசி இருக்கிறதா என்பதை சோதனை செய்து அதனை சுத்தம் செய்யவும். மூன்றாம் தரப்பு சார்ஜிங் கேபிள், சார்ஜ் வயர், அடாப்டர், இன்ஸ்டால் செய்துள்ள செயலிகள் ஆகியவற்றின் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம்.இதற்கு முதலில் நம்முடைய சார்ஜிங் அடாப்டரையையும் சார்ஜிங் போர்டுகளையும் சரி பார்த்த பின்பு சார்ஜிங் போர்ட்டில் ஏதாவது ஈரப்பதம் இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். ஒருவேளை மென்பொருள் பிரச்சினையாக இருந்தால் போனை ரீஸ்டார்ட் செய்யலாம். அல்லது வயர்லெஸ் சார்ஜரை பயன்படுத்தலாம்.
ஐபோன் சார்ஜிங் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது : ஆண்ட்ராய்டு மொபைல்களை போலவே ஐபோனிலும் அதன் சார்ஜிங் போர்ட் மற்றும் சார்ஜிங் கேபிள் ஆகியவற்றை முதலில் சரி பார்க்க வேண்டும். யூஎஸ்பி போர்ட்டை பயன்படுத்துபவராக இருந்தால், போர்ட் ஏதேனும் சேதமடைந்திருந்தாலும் உடைந்திருந்தாலும் சார்ஜிங் பிரச்சினை ஏற்படலாம் மேலும் வீட்டில் உள்ள வேறு ஏதேனும் அவுட்லெட்டில் சார்ஜ் செய்ய முயற்சி செய்து பார்க்கலாம்.
அடுத்தபடியாக ஃபோனுடைய சார்ஜிங் போர்ட்டில் உள்ள தூசுக்கள் மற்றும் அழுக்கை நன்றாக நீக்கி ஒரு அரை மணி நேரம் வரை போனை சார்ஜில் போட்டு வைக்கவும். அதுவும் சரியாகவில்லை என்றால் போனை ரீஸ்டார்ட் செய்து மற்றுமொரு அரை மணி நேரத்திற்கு போனை சார்ஜில் போட்டு வைக்கலாம்.இவை அனைத்தையும் முயற்சித்து பார்த்தும் உங்களது பொன் சார்ஜ் ஏறவில்லை எனில் உங்களது சார்ஜிங் கேபிள் மற்றும் அடாப்டர் ஆகியவற்றுடன் ஆப்பிள் ஸ்டோர் அல்லது ஆப்பிளின் அதிகாரம் சர்வீஸ் சென்டருக்கு சென்று போனை சரி செய்து தருவதற்காக கோரிக்கை விடுக்கலாம். மேலும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் உதவி மையத்தையும் நாடலாம்.