இன்றைய ட்ரெண்டில் முக்கிய இடத்தை இந்த எலெக்ட்ரிக் கார்கள் பிடித்துள்ளது என்பது நாம் அறிந்த விஷயமே. இதை பலரும் தேர்வு செய்வதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. எரிபொருள் முதல் சிறப்பம்சங்கள் வரை இதில் பல விஷயங்கள் அடங்கும். அந்த வகையில், சமீப காலமாக எலெக்ட்ரிக் கார்களை வாங்க கூடிய நுகர்வோரின் எண்ணிக்கை மற்றும் அதன் தேவை அதிகரித்து வருகிறது. பல வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே பலவித மின்சார கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
வழக்கமாக, எலெக்ட்ரிக் காருக்கு அதன் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய அதிக நேரம் தேவைப்படும் என்று பலரின் கருத்தாக உள்ளது. பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர்களுக்கு இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. இருப்பினும் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நேரமும் குறைந்து வருகிறது. அந்த வகையில் சில எலெக்ட்ரிக் கார்களை மிகவும் குறைந்த நேரத்திலேயே சார்ஜ் செய்ய முடியும். அப்படிப்பட்ட அதி நவீன எலெக்ட்ரிக் கார்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
போர்ஷே டெய்கான் பிளஸ்: பிரபலமான ஜெர்மன் ஸ்போர்ட்ஸ்கார் பிராண்டின் முதல் மின்சார கார் இந்த போர்ஷே டெய்கான் தான். இது ஏற்கனவே பல வகையில் அதன் திறனை நிரூபித்துள்ளது. அதே போன்று உலகில் உள்ள மின்சார கார்களில் வேகமாக சார்ஜ் செய்ய கூடிய முதன்மையான காராக இது உள்ளது. இந்த சொகுசு வகை ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் கார் ஒரு மணி நேர ஏசி சார்ஜிங் மூலம் 53 கிமீ ரேஞ்சுக்கு ஆற்றலை பெறும் திறன் கொண்டது, அதே சமயம் ஒரு மணிநேர டிசி சார்ஜிங் மூலம் 1,046 கிமீ தூரம் வரை ஓட கூடியது.
கியா EV6: 2WD கியா EV6 லாங் ரேஞ்ச் எலெக்ட்ரிக் காரானது உலகின் இரண்டாவது அதிவேக சார்ஜிங் ஆக கூடிய எலெக்ட்ரிக் காராகும். இது ஒரு மணிநேர ஏசி சார்ஜிங் மூலம் 51 கிமீ வரை ஆற்றலை பெரும். மேலும் இது ஒரு மணிநேர டிசி சார்ஜிங் மூலம் 1,046 கிமீ தூரம் வரை பயணம் செய்ய வழி செய்கிறது. கியா பிராண்ட் கார்களை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த ஆப்ஷனாகும்.
மெர்சிடிஸ் EQS 580 4MATIC: மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வாங்க வேண்டும் என்கிற கனவை பலரும் வைத்திருப்பார்கள். அந்த வகையில், மெர்சிடிஸ் EQS 580 4MATIC எலெக்ட்ரிக் கார் என்பது உலகின் மிகவும் சுவாரஸ்யமான மின்சார சொகுசு கார்களில் ஒன்றாகும். எஸ்-கிளாஸ் பெயரிடப்பட்ட இந்த எலக்ட்ரிக் சொகுசு கார், ஒரு மணி நேர ஏசி சார்ஜிங்கில் 53 கிமீ தூரத்தையும், டிசி சார்ஜிங்கில் ஒரு மணி நேரத்தில் 788 கிமீ தூரத்தையும் கடக்க கூடிய திறன் கொண்டது. பென்ஸ் பிரியர்களுக்கு இந்த கார் ஒரு சூப்பர் சாய்ஸ்.
டெஸ்லா மாடல் Y: லாங் ரேஞ்ச் டூயல் மோட்டார் டெஸ்லா மாடல் Y கார் என்பது உலகில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது மின்சார கார் ஆகும். மேலும் அமெரிக்காவில் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் ஆகும். டெஸ்லா பிராண்டிற்கு உள்ள தனித்துவம் தான் இந்த புகழுக்கு முக்கிய காரணம். இந்த டெஸ்லா மாடல் Y லாங் ரேஞ்ச் டூயல் மோட்டார் கார் ஒரு மணி நேர ஏசி சார்ஜிங்கில் 54 கிமீ தூரத்தையும், டிசி சார்ஜிங்கின் ஒரு மணி நேரத்தில் 595 கிமீ வரையிலும் பயணிக்க முடியும்.
ஹூண்டாய் ஐயோனிக் 5: லாங் ரேஞ்ச் 2WD ஹூண்டாய் அயோனிக் 5 எலெட்ரிக் கார் ஒரு மணிநேர ஏசி சார்ஜிங் மூலம் 59 கிமீ தூரம் வரை செல்லும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதை ஒரு மணி நேர டிசி சார்ஜிங் மூலம் 933 கிமீ தூரம் செல்லும். ஹூண்டாய் பிராண்ட் உங்களுக்கு விருப்பம் என்றால் இந்த காரை அவசியம் வாங்கலாம்.