அப்போது பேசிய அவர் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். செனட் குழு முன் ஆல்ட்மேன் ஆஜரானது இதுவே முதல் முறை. இந்த விசாரணையின் போது சட்டமியற்றுபவர்களிடம் AI டெக்னாலஜியானது எவ்வாறு தவறாக போய் முடியலாம் என்பதையும், விதிமுறைகளைக் கொண்டு வருவது காலத்தின் தேவை என்பதை பற்றியும் எடுத்து கூறினார்.
சக்திவாய்ந்த AI சிஸ்டம்களினால் ஏற்படும் அபாயங்களை குறைக்க அரசின் தலையீடு முக்கியமானதாக இருக்கும் என்று ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார். AI தொழில்நுட்பம் மேலும் முன்னேறும்போது, அது எப்படி நாம் வாழும் முறையை மாற்றும் என்று மக்கள் ஆர்வமாக இருப்பதை புரிந்து கொள்கிறோம். இந்த சூழலில் எதிர்கால அபாயங்களை தவிர்க்க அல்லது குறைக்க உலகளாவிய ஏஜென்சியை ஒன்றை உருவாக்கலாம் என முன்மொழிந்தார். அதாவது AI நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஆல்ட்மேன் கூறினார்.
இது மிகவும் சக்திவாய்ந்த AI சிஸ்டம்களுக்கு உரிமம் வழங்கும் மற்றும் அந்த உரிமம் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார். AI-ஆனது வாழ்க்கையின் பல அம்சங்களை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தங்களது OpenAI நிறுவப்பட்டதாக ஆல்ட்மேன் விளக்கினார். சக்திவாய்ந்த AI மாடல்களால் தவறான தகவல் மற்றும் வேலைப் பாதுகாப்பு கவலைகள் உட்பட பல ஆபத்துகளை தவிர்க்க அதிகாரபூர்வ ஒழுங்குமுறை தலையீடு அவசியம் என வலியுறுத்தினார்.
ChatGPT என்பது ஒரு இலவச சாட்போட் டூல் ஆகும். இது யூஸர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்கள் பதில் அளிப்பது போல பதிலளிக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் ChatGPT ரிலீஸான பிறகு உலகம் முழுவதும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கு மத்தியில் வீட்டுப்பாடங்களில் மாணவர்கள் ChatGPT பயன்படுத்தி ஏமாற்ற வாய்ப்பு இருப்பது குறித்து கல்வியாளர்களிடையே கவலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மக்களை தவறாக வழிநடத்த கூடும், பொய்களை பரப்ப கூடும், பதிப்புரிமைப் பாதுகாப்பை மீற கூடும் என Generative AI சார்ந்த அபாயங்களின் பட்டியல் நீண்டது.
இதற்கிடையே செனட் குழுவின் விசாரணையின் போது பேசிய ஆல்ட்மேன், மனித வாழ்க்கையை மேம்படுத்த உருவாக்கப்பட்ட தனது நிறுவனமான OpenAI, அபாயங்களையும் உருவாக்க கூடும் என வெளிப்படையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் போது, அரசியல்வாதிகளும் AI-ன் வளர்ந்து வரும் திறன்கள் குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து தேர்தல்களின் போது கூட AI எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை பற்றி செனட் குழுவினரிடம் விளக்கி பேசிய சாம் ஆல்ட்மேன், இது 'கவனத்திற்குரிய முக்கியமான பகுதி' என்றும் AI-க்கு கட்டுப்பாடு தேவை என்றும் கூறினார்.
இந்த தொழில்நுட்பம் தவறாகப் போனால், அது மிகப்பெரிய தவறாகி விடும் என்று நினைப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே தான் நாங்கள் AI டெக்னலாஜி பற்றி குரல் கொடுக்க விரும்புகிறோம், அபாயங்களை தடுக்க நாங்கள் அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றார். பொருளாதாரத்தில் AI ஏற்படுத்த கூடிய தாக்கத்தையும் ஒப்புக்கொண்டார்,.
இதில் AI தொழில்நுட்பம் சில வேலைகளை மாற்றும் மற்றும் சில துறைகளில் பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும். OpenAI போன்ற நிறுவனங்கள் சுதந்திரமாக தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் பொதுமக்களுடன் AI தொழில்நுட்பத்தைப் பற்றி பேச, 6 கண்டங்களில் உள்ள தேசிய தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு உலகளாவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள Altman திட்டமிட்டுள்ளார்.