தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த லைஃப் டைம் வேலிடிட்டி திட்டத்தை ரத்து செய்து வெகுநாட்கள் ஆகிறது. இப்போது உங்கள் சிம் கார்டின் வேலிடிட்டியை தக்க வைக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட கால இடைவெளியில் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்வது கட்டாயமாகும். அதேசமயம், வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா அவுட்கோயிங் கால் சேவையை வழங்கும் வகையில், குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டண திட்டத்தை ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனங்களும் செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் இதற்கு முன்பு ரூ.99 என்ற மதிப்பில் குறைந்தபட்ச அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வந்தது. ஏர்டெல் நிறுவனம் நாட்டில் மொத்தம் 22 வட்டங்களில் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஹரியானா, ஓடிஸா ஆகிய வட்டங்களில் குறைந்தபட்ச அன்லிமிடெட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மேலும் 15 வட்டங்களில் கட்டண உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உயர்த்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் தற்போது வாடிக்கையாளர்களிடம் ரூ.155 வசூல் செய்யப்படுகிறது. இதன் வேலிடிட்டி 24 நாட்களாகும். அளவில்லாத அவுட்கோயிங் கால் சேவை, ஒரு ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் ஆகியவை இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட 17 வட்டங்களில் கட்டண உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய வட்டங்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. எஞ்சியுள்ள கொல்கத்தா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய வட்டங்களில் கட்டண உயர்வு இன்னும் அமலுக்கு வரவில்லை.
அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை : ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்துகின்ற போதிலும், அந்நிறுவனத்தின் சேவையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 15.26 லட்சம் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை தேர்வு செய்துள்ளனர் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அமைப்பின் புள்ளி விவரங்கள் மூலமாக தெரிய வருகிறது.
கட்டண உயர்வு குறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கச் செய்தியில், “வாடிக்கையாளர்களின் சவுகரியம் கருதி, மீட்டர் முறையிலான கட்டண நடவடிக்கையை கைவிட்டு, குறைந்தபட்ச அளவில்லா ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கு தடையற்ற சேவையை அனுபவிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச அன்லிமிடெட் ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்தி உள்ளது என்றாலும் கூட, இதன் மூலமாக அந்த நிறுவனத்துக்கு பெரிய அளவில் வருவாய் அதிகரிப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதாவது 1.3 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை மட்டுமே வருவாய் அதிகரிக்கும் என்றும், 4ஜி ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்தும்போது தான் பெரிய அளவுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும் தொலைத்தொடர்பு வணிக ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.