சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக தனக்கு சொந்தமாக இரண்டு ஸ்டோர்களை மும்பை மற்றும் டெல்லியில் புதிதாக துவங்கியுள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் யூசர்கள் பலரும் மிகப்பெரும் அளவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும் தங்களது சேவைகளை மேம்படுத்துவதற்கு தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு மதிப்பாய்வுகளை நடத்தி வருகிறது.
இதில் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துவித ப்ராடக்டுகள் மற்றும் சேவைகளை குறித்தும், வாடிக்கையாளர்கள் அதனால் திருப்தியாக உள்ளார்களா என்பதை குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது ஆப்பிள் ப்ராடக்ட் பலவற்றிலும் டிஸ்ப்ளே பிரச்சனை, பேட்டரி பிரச்சனை மற்றும் பழுதுகளை சரி பார்ப்பதற்கு ஆகும் செலவு ஆகியவை பெரும் குறைகளாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர்கள் இந்தியாவில் இருப்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஆப்பிள் வாடிக்கையாளர்களும் தங்களது பழுதடைந்த ஆப்பிள் ப்ராடக்ட்களை நேரடியாக அங்கு கொண்டு சென்று தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி வாடிக்கையாளர்களிடையே தங்களது நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றை தவிர்த்து பல்வேறு ஆப்பிள் யூசர்களும் தங்களது ஆப்பிள் ப்ராடக்டுகளின் பழுதை சரி செய்வதற்கு மற்ற பிராண்டுகளை விட இதற்கு மிக அதிக செலவில் இருப்பதாக புகார் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 2,344 ஆப்பிள் டிவைஸ் யூஸர்கள் அளித்த பின்னூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆப்பிள் டிவைஸை வாங்கி 3 வருடத்திற்குள்ளாகவே அவற்றை பழுது நீக்கம் வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதற்கான செலவு மிகவும் அதிகம் எனவும் புகார் அளித்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக பார்க்கையில் கணக்கெடுப்பில் பங்கெடுத்த ஆப்பிள் வாடிக்கையாளர்கள் 30 சதவீதம் பேர் நேரடியாக ஆப்பிள் ஸ்டோருக்கு சென்று அங்கு தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ளவும், ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். 44 சதவீதம் பேர் ஆப்பிள் ஸ்டோர்களை பார்க்க விரும்புவதாகவும் ஆனால் பொருட்களை வாங்குவது என்றால் அருகில் இருக்கும் டீலர் அல்லது இ-காமர்ஸ் தளங்களின் மூலம் பொருட்களை வாங்குவதாகவும் கூறியுள்ளனர்.