நாம் நீண்ட நேரம் ஸ்மார்ட் போனை பயன்படுத்திக் கொண்டிருக்கையில், ஸ்மார்ட்போன் அதிக வெப்பமாவதை உணர முடியும். அதிலும் தற்போது வரும் ஸ்மார்ட்போன்கள் பலவும் மிக விரைவிலேயே வெப்பமாகி விடுகின்றன. மேலும் கோடை காலம் ஏற்கனவே ஆரம்பித்து விட்ட நிலையில் ஸ்மார்ட் போன்கள் வெப்பமாவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் ஓரளவுக்கு மேல் அதிக வெப்பமானால் அவற்றின் பேட்டரியிலும் ஸ்மார்ட்போன் இயக்கத்திலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகலாம். எனவே முடிந்தவரை ஸ்மார்ட்போனின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்ய வேண்டும். எப்படி எல்லாம் நம்முடைய ஸ்மார்ட் போன் குளிர்ச்சியாக வைப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
போனை காருக்குள் வைத்து விட்டு செல்லக்கூடாது : பெரும்பாலானோர் காரை வெளியிடங்களில் பார்க் செய்யும் போது காரின் உள்ளேயே ஸ்மார்ட்போனை வைத்து, காரை பூட்டி விட்டு செல்கின்றனர். வெயில் காலங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வெப்பமான சூழ்நிலையில் செல்போனின் பேட்டரி பாதிப்படைய கூடிய வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக ஐபோன்களை 35 டிகிரிக்கு மேல் அதிக வெப்ப நிலையில் வைக்கும் போது அவற்றின் பேட்டரிகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய ஒளி படுமாறு நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை வைக்க கூடாது : மற்ற பொருள்களைப் போலவே ஸ்மார்ட்போனும் சூரிய ஒளியை கிரகித்துக் கொள்ளும் தன்மையை கொண்டுள்ளன. இதனால் முடிந்தவரை நீண்ட நேரத்திற்கு ஸ்மார்ட்போனை சூரிய ஒளியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வறண்ட குளிர்ச்சியான பகுதியில் வைத்து ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் செய்யலாம். சில போன்கள் சார்ஜ் செய்வதினாலேயே அதிக வெப்பம் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியிடங்களில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவது : வீட்டிற்கு வெளியே செல்லும்போது அதிக நேரம் ஸ்மார்ட்போனை சூரிய ஒளியில் பயன்படுத்தும் போதும் ஸ்மார்ட்போன்களின் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். ஒருவேளை இவ்வாறு நீங்கள் வெளியிடங்களில் இருக்கும் போது ஸ்மார்ட்போன் அதிக வெப்பமாவது உணர்ந்தால் உடனடியாக சூரிய ஒளி படாத இடத்தில் ஸ்மார்ட்போனை வைத்து விடுவது நல்லது. வெப்பநிலை குறையும் வரை ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்ய வேண்டாம் : பல்வேறு ஸ்மார்ட்போன் யூசர்கள் தங்களது ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது வரும் ஸ்மார்ட்போன்கள் பலவற்றிலும் சார்ஜ் முழுமையானதும் தானாகவே சார்ஜை துண்டித்துக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருந்தாலுமே இரவு முழுவதும் மொபைலை சார்ஜ் போடுவது சரியான செயல்முறை அல்ல. இதன் மூலம் பேட்டரியில் பாதிப்புகள் உண்டாவதுடன் ஸ்மார்ட் போனின் வெப்பநிலை உயர்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும் தலையணைக்கும் அடியிலும், போர்வைக்கு அடியிலும் ஸ்மார்ட் ஃபோனை வைப்பதை தவிர்க்க வேண்டும்.