வாட்ஸ்-அப் செயலியின் புதிய அப்டேட்கள் எப்போதுமே சில அற்புதமான அப்டேட்களை உள்ளடக்கியிருக்கும். அந்த வகையில் அடுத்ததாக சில புதிய அப்டேட்களை, வாட்ஸ்-அப் செயலி விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் அதன் பயனர்களின் உடனடி செய்தி அனுபவத்தை மேம்படுத்த கேமரா சுவிட்ச், புகைப்படங்களை உயர்ந்த தரத்தில் அனுப்பும் வசதி, வாட்ஸ்அப் குழுவின் நோக்கம் மற்றும் விளக்கங்களுக்கான எழுத்து வரம்பை அதிகரித்துள்ளது. WAbetainfo படி, WhatsApp அதன் Android, iOS மற்றும் இணைய பயனர்களுக்காக புதிய அம்சங்கள் தற்போது சோதனை முயற்சியில் உள்ளன. பின்னர் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் இந்த வசதி பெறமுடியும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்…
வாட்ஸ் அப் குழுவின் எழுத்து வரம்பு அதிகரிப்பு : வாட்ஸ்-அப் குரூப்பின் சப்ஜெக்டை எழுதுவதற்கான வரம்பு 25 எழுத்துகளாக இருந்தது. ஆனால் விரைவில், பயனர்கள் 100 வார்த்தைகள் வரை எழுத முடியும். கூடுதலாக, விளக்கங்களுக்கான எழுத்துகளின் வரம்பு 512-லிருந்து 2048 வரை அதிகரிக்கும். இது குழுவின் தலைப்பு மற்றும் சப்ஜெக்டை, குழுவில் உள்ள உறுப்பினர்களிடையே அட்மின் முறையாகவும், முழுமையாகவும் விளக்கும் வகையில் எளிதாக்கும் என எத்ர்பார்க்கப்படுகிறது.
புகைப்படத்தின் ஒரிஜினல் குவாலிட்டி : புகைப்படத்தின் ஒரிஜினல் குவாலிட்டி குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர்வதற்கான வசதியும், பீட்டா பயனாளர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் ஒன்று வழங்கப்பட உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் குவாலிட்டி குறையாமல் புகைப்படங்களை அனுப்ப முடியும். இதன் மூலம் வாட்ஸ்-அப் செயலியில் பகிரும் புகைப்படத்தின் குவாலிட்டி குறைகிறது என்ற பயனாளர்களின் நீண்ட கால குற்றச்சாட்டுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய எழுத்துருக்கள் (New fonts) : வாட்ஸ்-அப் செயலி டெவலப்பர்கள் புதிய எழுத்துருக்களை சேர்க்கவும் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அப்டேட் மூலம் Calistoga, Courier Prime, Damion, Exo 2 மற்றும் Morning Breeze ஆகிய புதிய எழுத்துருக்கள் வாட்ஸ்-அப் செயலியில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFs-களை எடிட் செய்வதன் மூலம், புதிய எழுத்துருக்களை சேர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
IOS -ல் கம்யூனிட்டி குரூப் செய்திகளுக்கு பதிலளிக்கும் வசதி : வாட்ஸ்அப்பில் தற்போது சமூக அறிவிப்பு குழுக்களில் அனுப்பப்படும் செய்திகளுக்கு பதிலளிக்க (react) முடியாது. ஆனால், விரைவில், சமூக அறிவிப்பு குழுவில் (Community group) உள்ள செய்திகளுக்கு பயனர்கள் பதிலளிக்கும் வசதி விரைவில் WhatsApp அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அப்டேட் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உரையை திருத்தும் வசதி : Wabetainfo இன் தகவலின் படி, மெட்டாவிற்குச் சொந்தமான இயங்குதளமானது டெக்ஸ்ட் எடிட்டரை புதுப்பித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில், புதிய டெக்ஸ்ட் எடிட்டருடன், drawing tool-ல் மூன்று புதிய அம்சங்களைச் சேர்க்க WhatsApp திட்டமிட்டுள்ளது. அவை, Keyboard-க்கு மேலே உள்ள Font விருப்பங்களைத் Tap- செய்வதன் மூலம் வெவ்வேறு எழுத்துருக்களுக்கு இடையில் விரைவாக மாறக்கூடிய திறன். டெக்ஸ்ட் சீரமைப்பை வலது, இடது என மாற்றும் வசதி, எழுத்துக்களின் Back ground colour-களை மாற்றி ஹைலைட் செய்யும் வசதி ஆகியவை சோதனை முயற்சியில் உள்ளன.