ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது ஒவ்வொரு நாளும் அபரிமிதமாக வளர்ச்சியை எட்டியுள்ளது. முன்பெல்லாம் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக மட்டும் இணையத்தைப் பயன்படுத்திய காலங்கள் மறந்து இன்றைக்கு பலரின் வாழ்வாதாரத் தேவைகளை நிவர்த்திச் செய்யக்கூடிய பல பணிகளை ஸ்மார்ட்போன்கள் நிறைவேற்றி வருகிறது. ஆன்லைனின் ஷாப்பிங் மற்றும் ஆன்லைனில் வணிகம் என்பது வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு பேருதவியாக இருப்பது நெட் இணைப்புகள் தான். இதோடு மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து மாணவர்களின் கல்வி தேவைகளை நிவர்த்தி செய்யவும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுகிறது.
சமீபத்தில் நோக்கியாவின் வருடாந்திர மொபைல் பிராட்பேண்ட் இண்டெக்ஸ் (எம்பிஐடி) அறிக்கையின்படி, இந்தியாவில் மொபைல் டேட்டா டிராஃபிக் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3.2 மடங்கு அதிகரித்து, மாதத்திற்கு 14 எக்சாபைட்டுகளை எட்டியுள்ளது என்றும், கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு பயனரின் சராசரி தரவு நுகர்வு ஒரு பயனருக்கு ஒரு மாதத்திற்கு 19.5 ஜிபி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் உங்களது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி சுமார் 6, 600 பாடல்களை டவுன்லோடு செய்தமைக்குச் சமம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பான்-இந்தியா மொபைல் டேட்டா பயன்பாடு மாதத்திற்கு 2018 இல் 4.5 எக்ஸாபைட்களில் இருந்து 2022 இல் 14.4 எக்ஸாபைட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒட்டு மொத்தத்தில், இந்தியாவில் உபயோகிக்கப்படும் மொத்த மொபைல் டேட்டா வருகின்ற 2024 க்குள் இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனியார் வயர்லெஸ் நெட்வொர்க்குகளில் நாட்டின் முதலீடு வருகின்ற 2027 ஆம் ஆண்டில் 250 மில்லியனை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் நோக்கத்தை ஆதரிக்கும் அதே வேளையில், இந்த வளர்ச்சி நிலையான முறையில் நிர்வகிக்கப்படுவது அவசியம்" என்றும் சஞ்சய் மாலிக் தெரிவித்துள்ளார்.