நெல்லை டவுன் திருநகர் பகுதியில், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு உதவி பெறும் டவுன் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இந்தப் பள்ளியில் இன்று காலை விளையாட்டு பாடவேளையில் மாணவர்கள் மைதானத்தில் உள்ள பள்ளியின் கழிவறைக்கு சென்ற போது கழிவறை சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் பலத்த காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்து உயிருக்கு போராடிய மாணவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசுக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவர் உயிரிழந்திருக்கிறார். இதன் மூலம் இந்த விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்திருக்கிறது.
மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்த மாணவர்கள் யார் என்பதும், காயமடைந்த மாணவர்கள் யார் என்பதையும் சொல்லாமல் பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக இருப்பதால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விபத்து நடந்ததையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் கட்டிட ஸ்திரத் தன்மை பாதிப்புக்குள்ளானதாகவும், அதனை உரிய நேரத்தில் ஆய்வு செய்திருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இடிந்து விழுந்த கழிவறை சுற்றுச்சுவர் 10 ஆண்டுகளுக்கு முன் தான் கட்டப்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.