கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளற்ற பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மிக மிக அவசர, அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் அனுமதிக்கப் படுகிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, வேளாண்துறை,தோட்டக் கலைத்துறை, கூட்டுறவுத் துறைகளின் சார்பில் மாநகரப் பகுதிகளில் 535 வாகனங்களிலும் புறநகர்ப் பகுதிகளில் 500 வாகனங்களிலும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு, காலை, மதியம் உணவு வழங்கப்படுகிறது. ஆனால், அம்மா உணவகத்திற்கும் செல்ல இயலாதவர்கள், சாலையோரம் வசிக்கும் முதியோர்கள் பலர் உள்ளனர். அவர்களின் பசியைப் போக்க பல்வேறு தன்னார்வ அமைப்பினர், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சாலையோர முதியோர்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.
இதன்படி, திருச்சி மாநகரம் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் 5 பேர் கொண்ட குழு உணவு வழங்கி வருகின்றனர். திருநங்கைகள் ரியானா, நமீதா, பர்வீன், உமா, மாயா ஆகியோர் தங்களுடைய சொந்த சேமிப்பில் இருந்தும் நண்பர்கள் தரும் நன்கொடை மூலம் கிடைக்கும் நிதியில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கி தங்களது வீட்டிலேயே உணவை சமைத்து, பொட்டலமாக்கி, சாலையோரத்தில் இருப்பவர்களைத் தேடிச் சென்று வழங்கி வருகின்றனர்.
கொரோனா கொடுந்தொற்று காலத்தில் பலரும் வேலையிழந்து, வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், பெற்றோர், உறவினர்கள் கைவிட்ட நிலையில் இருக்கும் திருநங்கைகள் திருச்சி மாநகரில் செய்து வரும் அன்னதானம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இது குறித்து ரியானா உள்ளிட்டோர் கூறுகையில், கொரோனா கொடுந்தொற்று காலத்தில், நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். இதே போல் நீங்களும், உங்கள் பகுதியில் பிறருக்கு உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.