எங்களுக்கு வசதிகள் வேண்டாம், வாழ்வதரத்தினை பறிக்காதீர்கள், எங்களுக்கு வாழ்வுரிமை தாருங்கள் -நாங்கள் வாக்குரிமை தருகிறோம் என்று அரசினை நோக்கி கூக்குரல் எழுப்பி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் இருக்கும் துலுக்கன்குளம் கிராம மக்கள். வைப்பாறு ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் 150 குடியிருப்புகள் உள்ளன. இக்கிராம மக்கள் கடந்த 4 தலைமுறையாக, 1905ம் ஆண்டு முதல் அப்பகுதியில் டிஸ்பாரஸ்ட் (காட்டு புறம்போக்கு) என்று அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உப்பளங்கள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் 1 ரூபாய் இடத்திற்கு வரி கொடுத்த மக்கள் கடந்த ஆண்டு வரை அரசுக்கு ரூ 400 வரை வரி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கிராம மக்களுக்கு இந்த உப்பளத்தொழிலை தவிர வேறு தொழில் எதுவும் கிடையாது, துலுக்கன்குளத்தில் தயாரிக்கப்படும் உப்பு தான் அதிகளவு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. காரணம் இந்த உப்பின் சுவை நன்றாக இருக்கும் என்பதால் இப்பகுதி உப்பிற்கு நல்ல கிராக்கி உண்டு. இத்தகவலால் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த உப்பள நிலங்கள் பறிபோகும் நிலையும், தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளதால் கிராம மக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
அரை ஏக்கர், ஒரு ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைத்து காலம் காலமாக பிழைத்து கொண்டிரு’கிறோம். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கிராம நிர்வாகத்துக்கு முறையாக வரி கட்டணம் செலுத்தியுள்ளோம். இந்நிலையில் தற்போது அரசு திடீரென துலுக்கன்குளம் பகுதியில் உள்ள உப்பளங்களை அழித்துவிட்டு வேறு பயன்பாட்டுக்கு நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது. எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. கிராம மக்களின் வாழ்வியல் சூழலை கருத்தில் கொண்டு துலக்கன்குளம் கிராமத்தில் உப்பள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பயனாளிகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ,தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் பொருட்டு துலக்கன்குளம் கிராமத்தில் வீடுகள் தோறும், வீதிகள் தோறும் கருப்பு கொடிகள் ஏற்றிய 20-க்கும் மேற்பட்ட மக்கள், உப்பள பகுதிக்கு சென்று அங்கு கருப்பு கொடிகளை நட்டி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர். மக்களின் உணவிற்கு சுவை கொடுக்கும் தங்களுடைய வாழ்வாதரத்தினை அரசு பறிக்க கூடாது, எங்களுக்கு எந்த வசதியும் தேவை இல்லை, வாழ்வாதரத்திற்கு உத்திரவாதம் கொடுத்தல் போதும், இல்லை என்றால் தங்கள் கிராமம் இருந்த சுவடுகள் இல்லமால் போய்விடும் என்றும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து உப்பளம், இறால் தொழில் செய்து வருபவர்களை கண்டுகொள்ளமால், அன்றாடம் உப்பளத்தினை நம்பி பிழைப்பு நடத்தி வரும் தங்களது வாழ்வாதரத்தினை அரசே பறிப்பது நியாமா ? என்று கேள்வி எழுப்பி மக்கள் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என்கின்றனர் கண்ணீருடன்.
இது குறித்து விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமாரிடம் கேட்ட போது, அக்கிராம மக்கள் பயன்படுத்தி வருவது அரசு காட்டு புறம்போக்கு நிலம், அதில் உப்பளம் அமைத்துள்ளனர். இதற்காக வரி செலுத்தி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது அப்பகுதியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளதால் புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப் படுவதாகவும், துலுக்கன்குளம் கிராமத்தினை தவிர மற்ற கிராம மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், இது தொடர்பாக துலுக்கன்குளம் மக்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார்.