மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற 17வது மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி அகடாமி அணியும், சௌத் போலீஸ் ஹாக்கி அணியும் மோதின. இதில் 3 - 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சென்னை அணி சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் பிலிப்ஸ் கிளப் சார்பில் 17ம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டி கடந்த 7ம் தேதி முதல் 5 நாள்கள் நடைபெற்றது. இதில் சென்னை, உடுமலைப்பேட்டை, திருச்சி, மதுரை, சேலம், சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 28 அணிகள் பங்கேற்கின்றன. நாக்-அவுட் முறையிலும், பின்னர் கால் இறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.
இதன் இறுதி போட்டிக்கு தமிழ்நாடு ஹாக்கி அகடாமி சென்னை அணியும், மதுரை சௌத் போலீஸ் ஹாக்கி அணியும் தகுதி பெற்றன. நேற்று மாலை நடைபெற்ற இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதின. போட்டி தொடங்கியது முதல் சென்னை அணியின் அதிக்கம் அதிகமாக இருந்தது. போட்டியின் முதல் பாதியில் சென்னை அணி ஒரு கோல அடித்து முன்னிலை பெற்றது. 2வது பாதி ஆட்டத்திலும் சென்னை அணி வீரர்கள் ஆட்டத்தினை தங்கள் பக்கமே வைத்திருந்தனர். 2வது பாதி ஆட்டத்தில் மேலும் 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றனர். பதிலுக்கு மதுரை அணி வீரர்கள் ஒரு கோல் மட்டுமே அடித்தனர்.
ஆட்டத்தின் முடிவில் 3 - 1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி அகடாமி சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றது. கடலூர் ஹாக்கி அணி 3வது இடத்தையும் கோவில்பட்டி பிலிப்ஸ் ஹாக்கி அணி 4வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜீ, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம், இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர்கள் ராதாகிருஷ்ணன். ராமசாமி ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினர்.