கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மல்லன்கோடு பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு மட்டுமே ஒரே வாய்ப்பு என்றும், மாநிலங்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய விஜய பிரபாகரன், தற்போது இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாகவும், பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்க்க வேண்டும், எல்லாவற்றையும் எதிர்த்தால் நாம் தான் முட்டாள் என்றும் கூறினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி கூட்டணி கட்சியினருடன் சென்று திருச்சுழி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவருடன், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.
தருமபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ருக்மணி தனி நபராகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுவரை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியுள்ளதாக கூறிய ருக்மணி, பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.