தமிழ்நாடு சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரைக்காக கூடியது. சட்டமன்றத்திற்குள் ஆளுநர் வந்தபோது மற்றும் அதன் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என முழக்கம் எழுப்பினர். என் இனிய சகோதர, சகோதரிகளே புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் எனக் கூறி உரையைத் தொடங்கினார் ஆளுநர்.
ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பியவாறு பேரவையின் மையப் பகுதிக்கு வந்து கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் உரையில், “கொரோனா 2 மற்றும் 3வது அலையை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் பறிக்கிறது, காலை உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது” என பேசினார். ஆளுநர் தனது உரையில் திராவிட மாடல், சமூகநீதி, பெரியார், அண்ணா, அம்பேத்கர், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்குவது உள்ளிட்ட வார்த்தைகள் இருந்தபோதும் அதனை தவிர்த்துவிட்டார். ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்தபோது இந்த வார்த்தைகள் இடம்பெற்றன.
வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரை முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தேசிய கீதம் இசைக்கும் முன்பு பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த சபாநாயகர், அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அறிவித்தார்.
ஆளுநர் வெளியேறிய நிலையில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினர். ஆளுநர் உரை வெற்று உரையாக அமைந்துள்ளது எனக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, சட்டப்பேரவையில் ஆளுநரை அழைத்து அசிங்கப்படுத்தி உள்ளனர், இதுதான் ஜனநாயக மரபா? எனக் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவை சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுவரை பின்பற்றப்பட்ட மரபு மற்றும் விதிகளுக்கு எதிராக ஆளுநர் உரையை வாசித்துள்ளார். ஆளுநர் உரைக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். மேலும், தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் வெளியே சென்றுள்ளார். இதன்மூலம் தேசிய கீதத்தை அவமதிப்பு செய்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.