தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று பகலில் மாநகரம் முழுவதும் வெப்பம் நிலவிய சூழலில் இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
புறநகர் பகுதிகளான ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம், வண்டலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. பூந்தமல்லி, போரூர், திருவேற்காடு, வேலப்பன்சாவடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கனமழையால் பூந்தமல்லி,மதுரவாயல் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட வ.உ.சி நகர் திருவள்ளுவர் குடியிருப்பில் முதல் பிரதான சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்த பிறகு சத்தம் குறைந்து மின்கசிவு நின்றது.