பொங்கல் பண்டிகையைக் கொண்டாட உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதன் காரணமாக, ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் பொதுமக்களின் பயணத்தை சுலபமாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சென்னையின் 5 பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் உள்பட 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து வெளியூர் செல்ல பேருந்துகள் புறப்படும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர மற்ற ஊர்களான மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.