தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதியுடன் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த மூன்று நாட்களாக தொற்று பரவல் வேகம் குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம், சுற்றுலா தலங்கள், கடற்கரைக்கு செல்வதற்கான தடை தொடரும் எனக் கூறப்படுகிறது.