மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு இங்கு சிவன் அகோரமூா்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும்.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா, கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், பிரம்ம வித்யாம்பிகை உடனான ஸ்வேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மூன்று தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். வருகின்ற மார்ச் 6 ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.