திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மீனாட்சிப்பட்டியில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி பரப்புரை செய்தபோது, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு திமுக நிர்வாகி பணம் கொடுக்க முற்பட, அதனை வேட்பாளரே தடுத்தார். பின்னர் மறைவாக பணம் கொடுக்கப்பட்டது. இதேபோன்று பாமக வேட்பாளர் ஜோதிமுத்து கோணபட்டியில் வாக்கு சேகரிக்க சென்றபோதும், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு மறைவாக பணம் கொடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் தலைவாசல் பகுதியில் கூட்டணி கட்சிகள் புடைசூழ புறப்பட்டார். ஆனால் இரண்டு கிராமங்களைத் தாண்டியதும் அதிமுக எம்.பி. காமராஜ் மற்றும் நிர்வாகிகள் பாதியில் இறங்கிச் சென்றதால் தனியாக சென்று வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டது. அதிமுகவினர் கலைந்து சென்றதால் சாலைகளும் கூட்டமின்றி வெறிச்சோடியது.
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அதிமுக பிரமுகர் கூவிக் கூவி வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் வாகனத்தில் வீதி வீதியாக சென்ற அவர், கண்ணில் பட்டோரையெல்லாம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். பால்வடியும் இந்த முகத்திற்காகவாவது ஓட்டு போடுங்கள் என வேண்டுகோள் விடுத்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரையின்போது மாம்பிஞ்சை பாமக வேட்பாளர் கையில் வைத்திருக்க, அதனை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனின் மருமகன் பறித்து கீழே எறிந்தார். சாணார்பட்டி பகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து வாக்கு சேகரிக்கும்போது, தொண்டர் ஒருவர் மாம்பிஞ்சு கொடுத்தார். அதனை விஸ்வநாதனின் மருமகன் கண்ணன் கோபத்துடன் பிடிங்கி கீழே எறிந்தார்.