சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உதவித்தொகை திட்டத்தை பாராட்டி வருகின்றனர், இந்த நூற்றாண்டில் மகத்தான திட்டமாக மகளிர் உதவித்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அளிக்காத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய் மனைவி சகோதரி என ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார். பெண்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு கோடி ஒதுக்கீடு:
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக இந்த நிதிநிலையில் ரூ. 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பேர் பயன்பெறுவார்கள் என மனக்கணக்கு போட்டு வருகிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம், ஆண்டுக்கு 12000 உதவித்தொகை என்பது பெண்களின் வறுமையை ஒழித்து பெருமையை ஒழித்து சுயமரியாதையோடு பெண்கள் வாழ்வதற்கு வித்திடும். இந்த திட்டம் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்கும்:
நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவர் பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடும் மகளிர் என பல்வேறு இடங்களில் தங்களது விலைமதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். விரைவில் இந்த திட்டதிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.