நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் எது நடந்தாலும் பிரம்மாண்டாக நடக்கும். அப்படி நடத்தினால் தான் திருச்சி. அப்படி நடத்தினால் தான் அமைச்சர் நேரு என்று பாராட்டினார்.
உதயநிதி அமைச்சராகத்தான் புதியவர், உங்களுக்கு பழையவர்தான். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் விமர்சனம் வந்தது, வரத்தான் செய்யும். அதை தனது செயல்பாடுகளால் உதயநிதி முறியடிக்க வேண்டும். அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்றும் பேசினார்.
தொடர்ந்து, தமிழகத்தில் நான்கு மண்டலத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தேன். அதில் ஒன்று திருச்சியில் அமைக்கப்படும். தமிழகம் உலகத்துடன் போட்டியிட வேண்டும். அதற்கு ஒலிம்பிக் அகாடமி உதவும் என்று அறிவித்த முதலமைச்சர், “இந்தியாவில் மகளிர் சுய உதவிக் குழுவை முதன் முதலில் உருவாக்கப்பட்டது தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் தான். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு, பல நூறு மணி நேரம் நின்றுக் கொண்டே நிதியுதவி வழங்கி உள்ளேன்” என்று நினைவுக்கூர்ந்தார்.