அரசை மட்டுமே நம்பாமல், ஏரியை தூர்வாரிய சென்னை இளைஞர்கள்!
சென்னை வேளச்சேரி ஏரியை இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து தூர்வாரி வருகின்றனர். அனைத்துக்கும் அரசை நம்பியிருக்காமல், தங்களாலும் முடிந்த உதவிகளை செய்து வருங்கால தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர் இந்த இளைஞர்கள்.


தமிழகம் முழுவதும் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு போய் காணப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் உள்ள வேளச்சேரி ஏரியின் ஒருபுறம் நீரின்றி வறண்டுபோனதை அடுத்து, அதனை தூர்வாரி புனரமைக்கும் பணிகளில் சென்னை இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்


50 ஏக்கர் பரப்பளவில் பறந்துவிரிந்து காணப்படும் வேளச்சேரி ஏரி, குப்பைக் கழிவுகளாலும், மாசடைந்த நீருமாய் மண்டிப்போய் கிடக்கிறது. இதனையறிந்த இளைஞர்கள் பலர், சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றாக திரண்டு, பயனற்றுக் கிடக்கும் ஏரியை புனரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்


சென்னையின் வெவ்வேறு திசைகளில் இருந்தும் ஒன்று திரண்ட இளைஞர்கள், கூட்டு குடும்பம் போல் தங்களுக்கு தேவையான நிதியை தாங்களே பகிர்ந்துகொண்டு, ஏரியில் படர்ந்துள்ள கழிவுகளை அகற்றி சமூக சேவையாற்றி வருகின்றனர்


வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் தங்களது நேரத்தை ஏரிக்காக செலவழித்து காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை ஏரியை தூய்மைப்படுத்தி வருகின்றனர். தங்களால் முடிந்த வரை கழிவுகளை அகற்றி அரசுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக வும் அவர்கள் தெரிவித்தனர்


எங்கிருந்தோ இளைஞர்கள் வந்து தங்களது பகுதியில் உள்ள ஏரியை சுத்தப்படுத்துவதை கண்டு வியப்படைந்த வேளச்சேரி பள்ளி மாணவர் தமிழ்செல்வன், தானும் அவரது பங்கிற்கு ஆர்வமாக தூர்வாரி வருகிறார்.