டிசி காமிக்ஸின் பேட்மேன் கதைகளில் வில்லனாக வரும் ஜோக்கரை பிரதான பாத்திரமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ஜோக்கர். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தை பார்க்க சென்ற இரண்டு ஏர் இந்தியா விமான பணிப்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களது உடமைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தை சோ்ந்த 29 வயதான பெண் ஒருவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான பெண் ஒருவரும் ஏர் இந்தியாவில் விமான பணிப்பெண்களாக உள்ளனர். வெள்ளிக்கிழமை விமானப்பணிப்பெண் இருவரும் பணி முடித்துவிட்டு, ஜோக்கர் படம் பார்க்க சென்னை விமான நிலையம் எதிரில் உள்ள பிவிஆர் திரையரங்கிற்கு சென்றனர்.
இரவுக்காட்சி முடிந்து நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் திரையரங்கிலிருந்து புறப்பட்டு திருமுடிவாக்கத்தில் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று கொண்டிருந்தனர். திருநீர்மலை அருகே சென்றபோது, 4 இளைஞர்கள் அவா்களை வழிமறித்தனர். இதனால் பயந்துபோன அவர்கள் வாகனத்தை நிறுத்தி என்ன என கேட்டுள்ளனர்.
அப்போது, அவர்கள் அந்த பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களை கீழே தள்ளியும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அப்போது அந்த விமான பணிபெண்கள் இருவரும் கூச்சலிட்டு கத்தியுள்ளனர். இதனால், பயந்துபோன நான்கு இளைஞர்களும், விமான பணிப்பெண்களை தாக்கிவிட்டு, அவர்கள் வைத்திருந்த கைப்பையையும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வானத்தையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் அந்த பெண்கள் புகார் அளித்தனர். விரைந்து சென்ற ரோந்து போலீசார், விமான பணிப்பெண்கள் இருவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, திருமுடிவாக்கத்தில் உள்ள அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டனர். காலையில் சங்கர்நகர் காவல்நிலையத்திற்கு வந்து புகாரளிக்குமாறு போலீசார் வலியுறுத்தினர். இதை அடுத்து சனிக்கிழமை காலையில் காவல் நிலையம் சென்ற விமான பணிப்பெண்கள் இருவரும், அந்த நான்கு இளைஞர்கள் மீது புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் டெலிவரி பிரிவில் வேலை பார்க்கும் பல்லாவரத்தைச் சேர்ந்த 23 வயதான சைன், 22 வயதான பிரேம்குமார், 23 வயதான அவினாஷ், பெருங்களத்தூரைச் சேர்ந்த 28 வயதான செந்தில்குமார் ஆகியோரின் உருவங்கள் பதிவாகியிருந்தன.