கிராமங்களில் கூட தற்போது பால்பாக்கெட் வந்துவிட்ட நிலையில் நகரங்கள் குறித்து கேட்கவே வேண்டாம். மாதிரியான மாநகரங்களின் காலைகள் பால் பாக்கெட்டுடனே விடிகின்றனர். அப்படி பால் பாக்கெட்டுகளில் பல நிறுவனங்கள் இருந்தாலும் ஆவின் என்பதே பொதுவாக பலரும் பயன்படுத்தும் பால்பாக்கெட். ஆனால் ஆவின் பால்பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கும். பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கேட்டு வாங்கினாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? எந்த பால்பாக்கெட்டை யார் பயன்படுத்தலாம் இப்படியான விவரங்களை பார்க்கலாம்
நீல நிறம்:
ஆவின் பாலில் அதிகம் பலரும் வாங்கும் பால்பாக்கெட் நீல நிற பால். இதனை நைஸ் பால் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் இந்த பால் அனைவருக்கும் ஏற்றது. அதாவது மீடியமான கொழுப்பு இதில் உண்டு. அதனால் எளிதில் ஜீரணம் ஆகும். இதனை குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் என அனைவருமே உட்கொள்ளலாம். 100கிராம் பாலில் 3 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது.
பச்சை பால்:
நீல நிறத்துக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பதுதான் பச்சை பால். இதில் கொழுப்பு சற்று அதிகம். அதனால் இந்த வகை பாலை வயதானவர்கள், நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள ஏதுவான பால் என கூறப்படுகிறது. 100 கிராம் பாலில் 4.5 கிராம் கொழுப்பு உள்ளது.
ஆரஞ்சு பால்:
ஆவின் பாலில் அதிக கொழுப்புச் சத்து கொண்ட பால் என்பதே இந்த ஆரஞ்சு நிற பால். கொழுப்பு அதிகம் என்பதால் வயதானவர்களும், நோயாளிகள் இந்த பால் பக்கம் போகவே வேண்டாம். அதிக கொழுப்புடன் இவ்வளவுக்கு திக்காக பால் எதற்கு என சந்தேகம் வரலாம். பெரும்பாலும் பால் தொடர்புடைய இனிப்பு பண்டங்கள் செய்ய இந்த பால் வகை பயன்படுத்தப்படுகிறது. மேலும், டீ கடைகளில் அதிக தண்ணீர் கலக்கலாம் என்பதால் இந்த பாலை பயன்படுத்துவார்கள்.
கொழுப்பும் அடர்த்தியும் அதிகம் என்பதால், இதனை ஃபுல் க்ரீம் பால் என்பார்கள். 100 கிராம் பாலில் 6 கிராம் கொழுப்பு உள்ளது.