2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கு ஏலம் நடைபெற்றபோது, மிக அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்களில் இஷான் கிஷானும் ஒருவர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்ற டூயல் ரோல் கொண்ட இஷான் கிஷான், தனக்கு காயம் ஏற்பட்டதுமே உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான ஸ்கேன் பரிசோதனைகளை செய்து கொண்டார்.
உலகிலேயே இந்தியாவில் தான், சீரியஸான தலைக்காயம் குறித்த வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளாத நிகழ்வுகள் அதிகம் என்று இந்திய தலைக்காய விழிப்புணர்வு கூட்டமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர், தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். மேலும், ஒரு மில்லியன் மக்கள் மிகுந்த காயங்களை அடைகின்றனர்.
மூளையை பாதிக்கக் கூடிய காயம் : Traumatic Brain Injury (TBI) என்பது உங்கள் தலையில் திடீரென அடிபடும்போது, மூளையிலும் காயத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். பலமான அடி காரணமாக நிகழும் இந்தக் காயம் என்பது உங்கள் மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும். இந்த வகை காயங்களால் நீங்கள் பாதிக்கப்படும்போது, மூளையில் காயம் ஏற்பட்டது குறித்து அறிகுறிகள் அதிகம் இருக்காது. சில சமயம் மிதமாகவும் அல்லது அதிகமாக அறிகுறிகள் தென்படும். எது எப்படியாயினும், இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால், நாளடைவில் மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுக்கு நினைவிழப்பு ஏற்படும். கோமா நிலைக்கு செல்லக் கூடும். சில சமயங்களில் இறப்புகூட ஏற்படும்.
தலையில் அடிப்பட்டவர்களுக்கு சக மக்களை அல்லது இடங்களை அடையாளம் காண முடியவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பெரியவர்களுக்கு இருக்கும் அதே அறிகுறிகள் குழந்தைகளிடமும் தென்படும். இது மட்டுமல்லாமல் அவர்கள் அழுகையை நிறுத்தவே மாட்டார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு தலையில் அடிபட்ட பிறகு, அவர்கள் சாப்பிட மறுத்துக் கொண்டே இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை செய்ய வேண்டும்.