மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்புமிக்க வீரராக இருப்பவர் இஷான் கிஷன். இவர் 2016 ஐபிஎல் ஏலத்தில் ரூ.35 லட்சத்துக்கு குஜராத் லயன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். தனது திறமையாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இவரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போட்டன. 2 கோடி ஆரம்ப விலையில் மெகா ஏலத்து வந்த இவரை மும்பை அணி ரூ.15.2 கோடி கொடுத்து வாக்கியது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தந்தவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா . 2015ம் ஆண்டு இவரது விலை 10 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரது விலை கிடுகிடுவென உயர்ந்தது. டீம் இந்தியாவில் கலக்கி வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை ரூ.15 கோடி கொடுத்து எடுத்துள்ளது.
டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் சூர்யகுமார் யாதவ் . டிவில்லியர்ஸ்-க்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் இவரை மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார்.தனது முதல் சீசனில் ரூ.10 லட்சம் என்ற அடிப்படை விலையில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். ஆனால் இப்போது மும்பை இந்தியன்ஸ் இவரை ரூ.8 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது. தனது கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் இந்த நிலையை எட்டியுள்ளார்.
இந்த பட்டியலில் அடுத்து வருவது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே. எல் ராகுல். இவரை ரூ.10 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. ராகுல் தனது அபாரமான ஆட்டத்தால் மார்க்கெட்டை ஏற்றினார். இந்திய அணியிலும் விளையாடி வருகிறார். லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் ராகுல் ரூ 17 கோடிகளைப் பெறுகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் . ஐபிஎல் தொடரில் தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தவர். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் ரூ.8 லட்சத்துக்கு எடுக்கப்பட்ட வீரர். தனது திறமையான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். சஞ்சு என்னதான் அட்டகாசமாக விளையாடினாலும் இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து தனது இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. இப்போது அவரது விலை ரூ.14 கோடி.
தோனியின் போர்வாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் கிரிக்கெட்டர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் மூன்று வடிவங்களிலான கிரிக்கெட் போட்டியில் கலக்கி வருகிறார். ராஜஸ்தான் அணி 2008ல் வெறும் 10 லட்சத்துக்கு ஜடேஜாவைவாங்கியது. ஆனால் தற்போது அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 16 கோடிக்கு சென்னை அணியில் இடம்பிடித்துள்ளார்.