பிரபர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 30-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லரின் சதம் சஞ்சு சாம்சனின் சிறு அதிரடியில் 217 ரன்களைக் குவிக்க தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏரோன் பிஞ்ச் (58 ரன் 28 பந்து 9 பவுண்டரி 2 சிக்ஸ்) , ஷ்ரேயஸ் அய்யர் (85, 51 பந்து 7 பவுண்டரி 4 சிக்ஸ்) அதிரடியில் 210 வரை வந்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியில் லெக்ஸ்பின்னர் செஹல் 4 ஓவர் 40 ரன்கள் கொடுத்தாலும் முக்கியமான ஹாட்ரிக்குடன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஐபிஎல் கிளாசிக் என்று வர்ணிக்கப்படும் இந்தப் போட்டி போன்று பிட்சைப் போட்டால் பவுலர்கள் கை கால் உடைந்து வீடு போய்ச் சேர வேண்டியதுதான். ஆனால் இந்த சாத்துமுறையிலும் குறைந்த சிக்கன விகிதம் காட்டியவர் சுனில் நரைன் இவர் 4 ஓவர் 21 ரன்கள் கொடுத்தார் ஆனால் விக்கெட் இல்லை. இது மிகப்பெரிய விஷயம். இவருக்கு அடுத்த சிக்கன விகிதமே ஓவருக்கு 8.50. அது ஷிவம் மாவி. என்றால் பிட்சின் தன்மையை பார்த்துக் கொள்ளலாம். கமின்ஸ், பிரசித் கிருஷ்ணா, உமேஷ் யாதவ் என்று பெரிய பெரிய ஆபீசர்களெல்லாம் அடி வாங்கிக் கொண்டு சென்றனர்.
இதை தொடர்ந்து சாம்சன் களமிறங்கினர். பட்லர் உடன் இணைந்து இவரும் பவுண்டரிகளாக அடித்தார். 19 பந்துகளில் 38 ரன்கள் குவித்து சாம்சன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய பட்லர் 59 பந்துகளில் சதம் அடித்தார். இதன்மூலம் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். 61 பந்துகளில் 103 குவித்து அவர் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.