ஐபிஎல் 2022 எலிமினேட்டர் போட்டியில் நேற்று ஆர்சிபியின் ரஜத் படீதார் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 112 ரன்கள் எடுத்தார் என்றால் அதில் 3 கேட்ச்கள் ட்ராப். தினேஷ் கார்த்திக்கிற்கு பிளம்ப் எல்.பி. அம்பயர்ஸ் கால் ஆனது. தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் இருந்த போது கேட்ச் விடப்பட்டது. இதனால் இவர் 37 ரன்கள் எடுக்க ஆர்சிபி 207 ரன்கள் குவித்தது, தொடர்ந்து ஆடிய லக்னோ அணியில் கேப்டன் ராகுல் மட்டுமே தனிமனிதனாகப் போராடினார். இவர் 58 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 79 ரன்கள் விளாசி ஹேசில்வுட்டிடம் ஆட்டமிழந்த போது லக்னோ வெளியேறுவது உறுதியானது.
விராட் கோலியின் பேட்டிங், வடிவேலு ஒரு படத்தில் சுந்தர் சியிடம் கூறுவாரே அதுபோல் ‘வெறும் பாடி லாங்குவேஜ்தாம்பா உள்ள ஒண்ணுமில்லப்பா’ன்னு சொல்வாரே அதுதான் கோலியை பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது. ஆனால் தமிழ் வர்ணனையில் தலைவன் கோலி என்று கூறுகிறார் ஒரு வர்ணனையாளர், வர்ணனையில் யாரையாவது தலைவன் என்று கூற எங்காவது கேட்டிருக்கிறோமா? இதெல்லாம் காலக்கொடுமை, ஐபிஎல் கற்றுத்தரும் புதிய கலாச்சாரங்கள்!
கோலி 24 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்குள் காட்டும் அங்க சேட்டைகள் இருக்கிறதே!! அவரது கவர் ட்ரைவ்வே காற்றில் கேட்ச் போல் செல்கிறது, முன்பெல்லாம் கவர் ட்ரைவ் என்றால் கோலி, அது ராஜ கவர் ட்ரைவ் ஆக இருக்கும் இப்போது அதுவே காற்றில் கேட்ச் போல் செல்கிறது. கடைசியில் ஆவேஷ் கான் பந்தில் அப்பர் கட் ஆடினார், நேராக டீப் தேர்ட் மேனில் கையில் போய் உட்கார்ந்தது.
படீதார் அதன் பிறகு வெளுத்து வாங்கி விட்டார். குருணால் பாண்டியாவை இருமுறை மிட் ஆனுக்கு மேல் அனுப்ப, பிறகு மிட் ஆஃப் ஓபனாக அங்கு ஒரு பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் படீதார். ஆர்சிபி 6 ஓவர்களில் 52/1. ரவி பிஷ்னோய் கொஞ்சம் டைட் செய்ய 8.3 ஓவர்களில் 70/1 என்ற போது கோலி வெளியேறினார். கிளென் மேக்ஸ்வெல் 10 பந்தில் 9 ரன் என்று பாண்டியாவிடம் வெளியேறினார். மஹிபால் லோம்ரோரை பிஷ்னோய் வீழ்த்தினார்.
இது படீதாருக்கு அதிக சுதந்திரத்தை அளிக்க கவர், மிட் ஆன், மிட் ஆஃப் என்று பவுண்டரிகளாக வெளுத்துக் கட்டினார். 16வது ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டது. 18வது ஓவரில் மோசின் கானை புல் ஷாட்டில் சிக்ஸ் விளாசி சதம் பூர்த்தி செய்தார் படீதார். 19வது ஓவரில் சமீராவை கிழித்தெறிந்தார் படீதார். இன்னொரு முனையில் கார்த்திக் 23 பந்தில் 37 ரன்கள் விளாச கடைசி 5 ஓவர்களில் லக்னோ 84 ரன்களை விட்டுக்கொடுத்தது. 207/6 என்று பெரிய இலக்கை எட்டியது ஆர்சிபி.
சமயத்துக்கு தக்கவாறு அடிக்கத்தவறிய ராகுல்: முகமது சிராஜ், குவிண்டன் டி காக்கை சடுதியில் வெளியேற்றினார். மனன் வோரா என்ற பழைய வீரரை திடீர்னெ ஒரு முக்கியமான போட்டியில் இறக்கியதன் எதிர்மறைப் பலன் நன்றாகத் தெரிந்தது ராகுல் மட்டும் சிராஜ் ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்காவிட்டால் பவர் ப்ளேயில் லக்னோ 6 ஓவர் 62 என்று வந்திருக்காது.
அதன் பிறகு ராகுல், ஹூடா, ஸ்டாய்னிஸ் சிக்சர்களை விளாசி 3 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்று கொண்டு வந்தனர், இப்போது கூட ஆர்சிபியை விட லக்னோ முன்னிலையில்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு முடியவில்லை. ஹர்சல் படேல் பிரமாதமாக வீசினார். ஹேசில்வுட் ராகுலை வீழ்த்த லக்னோ கதை முடிந்தது. ஆட்ட நாயகன் ரஜத் படீதார்.