U19 World Cup 2000: U19 உலகக் கோப்பை தொடரின் 3-வது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய யுவராஜ் சிங் 68 ரன்களை குவித்து 4 விக்கெட்டை வீழ்த்தி போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் யுவராஜ் தட்டிச் சென்றார். மேலும் அந்தத் தெடாரில் 203 ரன்கள் விளாசி, 12 விக்கெட்களை வீழ்த்தி U19 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் யுவராஜ். இறுதிப் போட்டியில் இந்திய அணி தொடரை நடத்திய இலங்கை அணியை வென்றது.
ICC Knockout 2000: அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து இந்திய அணியை அரையிறுதிக்கு முன்னேற வைத்தார். அந்தப் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் பெவிலியன் திரும்பிய நிலையில் தனி வீரராகப் போராடி யுவராஜ் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்.
Natwest Tri-Series England,, 2002: கங்குலி இங்கிலாந்து மைதானத்தில் ஜெர்சியை கழற்றி சுற்றிய நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. அந்தத் தருணத்தை உருவாக்கிய முக்கியப் பங்கு யுவராஜ் சிங்கிற்கு உள்ளது. இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்கை எட்ட முயன்ற இந்திய அணியின் சச்சின், சேவாக், கங்குலி, டிராவிட் என அனைவரும் பெவிலியன் திரும்பினர். இந்திய அணி தோல்வியின் விழிம்பில் இருந்த போது யுவராஜ் - கைப் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். இந்தப் போட்டியில் யுவராஜ் 69 ரன்களும், கைப் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ICC World T20, 2007: டி20 உலகக் கோப்பை தொடரை முதன்முதலில் ஐசிசி நடத்தியது. அந்தத் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான சச்சின், சேவாக், டிராவிட் இளம்வீரர்களுக்கு வழிவிட்டு தொடரிலிருந்து விலகினர். இளம்வீரர்களை கொண்டிருந்த இந்திய அணியில் யுவராஜ் சிங் மட்டுமே அனுபவ வீரராக வலம் வந்தார். அந்தத் தொடரில் மறக்க முடியாத போட்டியாக இருந்தது இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தான். இங்கிலாந்து வீரர் ப்ராடு வீசிய ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். இந்தச் சாதனையை இதுவரை யாரும் நெருங்கவில்லை. 12 பந்துகளில் அரைசதம் கடந்து யுவராஜ் சிங் மற்றொரு சாதனையும் நிகழ்த்தினார். அந்தத் தொடரில் தான் தோனி முதன்முதலாக கேப்டனாக செயல்பட்டார்.
ICC Cricket World Cup, 2011: இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். தெடார் நாயகன் விருதை வென்ற யுவராஜ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முக்கிய போட்டியில் 74 ரன்கள் எடுத்தார். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 261 ரன்கள் எடுத்தது. கடைசி 12 ஓவர்களில் பிரெட் லீ, ஷான் டைட், மிட்செல் ஜான்சன் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு யுவராஜ் 74 ரன்கள் எடுத்து காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்.