வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஓய்வு பெறும் கடைசி ஒரு நாள் போட்டியில் அவரது மகன் அணிந்து வந்த ஜெர்ஸி தற்போது புதிய சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்திருந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மலிங்கா இந்தப் போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 35 வயதான மலிங்கா 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்களை வீழத்தி உள்ளார். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட அவர் முடிவு செய்துள்ளார். இந்த போட்டியை நேரில் காண அவர் மனைவி, மகள், மகன் மைதானத்திற்கு வருகை தந்து மலிங்காவை உற்சாகப்படுத்தினர். மைதானத்திற்கு மலிங்கா மகன் மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி அணிந்து வந்திருந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இலங்கையை அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி அதிகம் விரும்புகிறீர்களா? என அந்நாட்டு ரசிகர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.