ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் என்றெல்லாம் பேசி கடைசியில் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக புத்துயிர் பெற்றது ஷேன் வார்ன் ‘ராக் ஸ்டார்’ என்று புகழ்ந்த ரவீந்திர ஜடேஜாதான். 175 ரன்கள். 9 விக்கெட்டுகள். அதுவும் இலங்கை அணி ஒட்டுமொத்தமாக ஜடேஜாவின் ஸ்கோரை முதல் இன்னிங்சில் எட்டவில்லை, 2வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்.
உண்மையில் பரிதாபமானது இலங்கை, இந்த வெற்றியைக் கொண்டாடி, ஜடேஜாவுக்கு மாலையிட்டு குதூகலிப்பதில் என்ன பயன்? இந்திய அணி 129 ஓவர்கள் ஆடி 574 ரன்கள், 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. ஆனால் இலங்கை அணி 2 இன்னிங்ஸ்கள் ஆடி 20 விக்கெட்டுகளை 352 ரன்களுக்கு இழந்து 222 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி கண்டது.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மும்மூர்த்திகள் வளர மற்ற அணிகளெல்லாம் அழிந்து வருகின்றன, மெல்ல கிரிக்கெட்டும் இனி சாகும். ஐசிசி என்றைக்க்கு தனியார் லீகுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கிறதோ, அல்லது டி20 கிரிக்கெட்டை வெறும் கிளப் மட்டத்துக்கு மட்டுமானதாக ஆக்குகிறதோ அன்றுதான் இனி டெஸ்ட் போட்டிகள் முன்னுக்கு வரும், அதுவரை இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலிய பண முதலைகள் தவிர மற்ற நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி மெல்லச் சாகும் என்பது திண்ணம்.