இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டடில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் படுமோசமாக விளையாடிய இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி 432 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி மூன்றாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 215 ரன்களுக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. 4-வது நாளில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கை ஒங்கியது. கோலி, புஜாரா, ராஹானே என அடுத்தடுத்து அவுட்டாகி இந்திய அணி 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மிகவும் மோசமான ஷாட் தேர்வு : இங்கிலாந்தை விட இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அனுபவமிக்கது மற்றும் சராசரியும் சிறப்பாக இருந்தது. ஆனாலும் அனுபவம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் லீட்ஸ் மைதானத்தில் படுதோல்வி அடைந்தனர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் இந்திய அணி வீரர்களின் ஷாட் தேர்வு மிகவும் மோசமாக இருந்தது. கே.எல்.ராகுல், விராட் கோலி, புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோர் பந்துகளை எதிர்கொண்ட விதம் மோசமாக அமைந்தது.
கடினமான கைகளின் செயல்பாடு : வேகப்பந்தை சந்திக்கும் போது பேட்ஸ்மேன்கள் லேசாக பந்தையை சுழற்ற வேண்டும். இதனால் பந்து ஸ்லிப்பிற்கு செல்லாது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் கைகளை பலமாக கொண்டு பந்துகளை எதிர்கொண்டனர். முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல், புஜாரா, கோலி, ராஹானே, பந்த் அனைவரும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தனர். மேலும் இந்திய பேடஸ்மேன்கள் பெரும்பாலும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தே அவுட்டாகினர்.
ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஜோடி : இங்கிலாந்து மூத்த பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தொடரிலிருந்து வெளியேறினாலும் இளம் பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் அவரது இடத்தை பூர்த்தி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். கோலி, ரோஹித், புஜாரா உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் வெறும் 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து வெற்றிக்கு இந்த ஜோடி முக்கிய காரணமாக இருந்தது.
ஜோ ரூட் அபாரம் : இந்த தொடரில் இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. லீட்ஸ் டெஸ்டில் இந்திய வீரர்கள் ரன் குவிக்க தவறினாலும் இங்கிலாந்து கேப்டன் 121 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த தொடரில் ஜோ ரூட் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். ஜோ ரூட்டின் சதம் தொடர்ந்தால் அடுத்து வரும் டெஸ்ட்களிலும் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாகவே இருக்கும்.
ஆடுகளத்தை தவறாக கணித்த விராட் கோலி : லீட்ஸ் ஆடுகளத்தை கேப்டன் விராட் கோலி தவறாக கணித்து இருந்தார் என்றால் அது தோல்விக்கு முக்கிய காரணம். லீட்ஸ் மைதானத்தில் குறைந்த புல் இருக்கும் என்பதால் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று முதல் பேட்டிங்கை விராட் கோலி தேர்வு செய்தார். இதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. பந்துகள் அனைத்தும் எழும்பியது. பேட்ஸ்மேன்களால் பந்தின் லெந்த்தை கணிக்க முடியவில்லை. இதனால் இந்திய அணி வீரர்கள் முதலில் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டது. இதுதான் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.