நேற்று டெல்லி என்ற ‘பொட்டி’ மைதானத்தில் நடைபெற்ற இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரன் விருந்தாக, சிக்சர்கள் பவுண்டரி யாக அமைந்தாலும் இந்திய அணியின் தொடர் டி20 போட்டி வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு தென் ஆப்பிரிக்கா அபாரமாக வென்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி பெறும் ரன் விகிதம் 14ஐ தொட்டது, ஆனால் டேவிட் மில்லர் (64), போட்டு பின்னி எடுத்தார், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் 8 ஓவர்களில் 86 ரன்களை வாரி வழங்கினர். தென் ஆப்பிரிக்க அணி நிறைய கேட்ச்களை விட்டாலும் சிஎஸ்கே அணி செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டுமாறு டிவைன் பிரிடோரியசை முன்னால் இறக்கி விட்டனர், அவர் 13 பந்துகளில் 29 ரன்களை 4 சிக்சர்களுடன் விளாசினார். ஹர்திக் பாண்டியாவை ஒரே ஓவரில் 3 சிக்ஸ் அடித்து ஐபிஎல் பைனல் ‘சாதனை நாயகனை(!)’ பந்து வீச்ச்சிலிருந்தே வெளியேறச் செய்தார் பிரிட்டோரியஸ்.
இந்திய அணி பரிசோதனைகள் செய்யலாம் ஆனால் அது வாய்ப்பு கொடுக்கும் வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்க வேண்டும், உதாரணத்துக்கு ஆவேஷ் கான் விக்கெட் இல்லாமல் முடிந்தார், ஹர்ஷல் படேல் ஓரே ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டார், பாண்டியாவ்ன் ஆல்ரவுண்ட் திறமை இன்னும் சந்தேகமாகவே உள்ளது, ருதுராஜ், இஷான் கிஷன் நல்ல வேகப்பந்து வீச்சுக்கு எதிராக டைமிங் இன்றி திண்டாடியது பட்டவர்த்தனமாகியுள்ளது.
இந்தக் கோளாறுகளை ஒன்று சரி செய்ய வேண்டும் இல்லையெனில் பழைய பாணியில் உங்களுக்கெல்லாம் இந்த மாதிரி பிட்ச் போட்டல் வெற்றி பெறத்தான் செய்வீர்கள், இனி பாருங்கள் குழிப்பிட்சைப் போட்டு ஸ்பின்னை வைத்து உங்களைக் காலி செய்கிரோ என்ற மனோபாவத்துக்குச் செல்ல வேண்டி வரும். ரிஷப் பண்ட் கேப்டன்சி போதாது என்பதை பலரும் சுட்டிக்காட்டியும் அவரை கேப்டனாகப் போட்டதும் ஒரு தவறு, தோல்விகள் அவரது பேட்டிங்கைக் காலி செய்தால் அதற்கு இந்திய அணி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.