இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் கடந்த 29ஆம் தேதி அதிகாலை டெல்லியில் மோசமான கார் விபத்தில் சிக்கினார். அதில் தலையில் காயம், முதுகில் சிராய்ப்புகள் ஏற்பட்ட நிலையில், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தற்போது ரிஷப் பந்த் சிகிச்சையில் இருந்து வருகிறார். கிரிக்கெட் வீரர்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் முதல் பட்டோடி வரை ஆபத்தான கார் விபத்துகளில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றவருமான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 2022ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி இரவு மோசமான கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில் பகுதியில் ஒரு நதிப்பாலத்தின் முன்பு சாலையிலிருந்து விலகிய சைமண்ட்சின் கார் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இறந்தபோது அவருக்கு வயது 46.
மன்சூர் அலி கான் பட்டோடி
இந்திய கிரிக்கெட் வீரரான மன்சூர் அலிகான் பட்டோடி 1961ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் மாகாணத்தில் கார் விபத்தில் சிக்கினார். அவர் பயணித்த காரானது மற்றொரு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், வலது கண் பார்வை பறிபோனது. அப்போது அவருக்கு வயது வெறும் 20. 6 மாத சிகிச்சைக்குப் பிறகு விபத்தில் இருந்து மீண்டெழுந்த பட்டோடி, இந்திய அணியின் இளம் டெஸ்ட் கேப்டனாக தனது 21 வயதில் பொறுப்பேற்றார். இடது கண் பார்வையைக் கொண்டே தனது பெரும்பாலான போட்டிகளில் விளையாடினார்.
முகமது அசாருதீன்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தனது குடும்பத்தினருடன் 2020 டிசம்பர் 31ல் ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். கோட்டா மேகா நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அசாருதீன், அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
முகமது ஷமி
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, 2018ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி டேராடூனில் இருந்து டெல்லி திரும்புகையில் விபத்தில் சிக்கினார். அதிகாலை 5 மணிக்கு ஷமி பயணித்த டோயோட்டா காரில் ட்ரக் ஒன்று மோதியது. விபத்தில் ஷமிக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், தலையில் 10 தையல்கள் போடப்பட்டன. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
சுனில் கவாஸ்கர்
இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியை முடித்துக்கொண்டு 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சுனில் கவாஸ்கர் தனது சக வர்ணனையாளர்களுடன் மான்செஸ்டரில் இருந்து லண்டனுக்கு ஜாகுவார் காரில் சென்றுகொண்டிருந்தார். அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார் கவாஸ்கர்.
“சாரல் மழை பெய்து கொண்டிருந்தது, எங்கள் கார் மிக வேகமாக இயக்கப்பட்டது. விபத்து மிகவும் பயங்கரமாக இருந்தாலும் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜோஹிந்தர் ஷர்மா
2007 உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த ஹரியானாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜோஹிந்தர் ஷர்மா, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் கார் விபத்தில் சிக்கினார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் கூறுகையில், “எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவும் ஏற்பட்டது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட எனக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்த 45 தையல்கள் போடப்பட்டன. எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.