பிரெண்டன் மெக்கல்லம், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி இங்கிலாந்து கிரிக்கெட்டின் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியிருக்கையில் இந்திய அணி மீண்டும் ரோஹித் சர்மா கேப்டன்சியைப் பெற்றுள்ளது. இன்று இவர்கள் இங்கிலாந்து கேப்டன் பட்லரின் அதிரடிப் படையை எதிர்கொள்கிறது. இயான் மோர்கன் ரிட்டையர் ஆகிவிட்டதால் பட்லர் முதல் போட்டியில் கேப்டனாக இயங்கவிருக்கிறார்.
இளம் அணிதான் இரண்டும் என்றாலும் தினேஷ் கார்த்திக் இங்கு 37 வயதில் உள்ளார், அங்கு ரிச்சட்ட் கிளீசன் 34 வயதாகிறது, ஏன் ரோஹித் சர்மாவுக்கே வயது ஆகிறது, சூரியகுமார் யாதவும் 30 கடந்தவர்தான். ஆனால் இப்போது தினேஷ் கார்த்திக் ஒரு நிறுவப்பட்ட இந்திய அணியின் பினிஷர் ஆவார். ஸ்பின் கொஞ்சம் கார்த்திக்கிற்கு பிரச்சனைதான், இதை இங்கிலாந்து டி20 ஸ்பின்னர் மேட் பார்க்கின்சன் குறித்துக் கொண்டிருப்பார் என்று கருத இடமுண்டு.
கிளீசன் ஒரு வலது வேகப்பந்து வீச்சாளர், இவரை மீண்டும் அணியில் அழைத்துள்ளனர். யார்க்கர்களை வீசுவதில் கில்லாடி. இங்கிலாந்து அணியில் சாம் கரன் திரும்பியுள்ளார், அவரது நியூபால் ஸ்விங் பவுலிங்கும், கடைசியில் இறங்கி அடிக்கும் திறனும் அவரை இந்த டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஒரு அபாயகர வீரராக்கியுள்ளது. ஒருவேளை இவரை முன்னால் இறக்கி செஹல் பவுலிங்கை விளாச சொல்லலாம்.
இந்திய டி20 அணி பிரமாதமாக உள்ளது, தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், பாண்டியா, தினேஷ் கார்த்திக் என்று பயங்கரமாக இருந்தாலும் அயர்லாந்து அணி அன்று 224 ரன்களை விரட்ட முற்பட்டு 220 ரன்களைக் குவித்ததால் பவுலிங் பயம் இந்திய அணிக்கு உள்ளது, உம்ரன் மாலிக் இன்னும் தன் திறமைக்கானத் தீனியைப் போடவில்லை.