இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் 2023 சீசன் ஆர்வத்தில் மூழ்கி இருக்கும் வேளையில், ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. இந்த ஐபிஎல் சீசன் முடிந்த கையுடனே இந்திய அணி சில முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் பிரதானமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதுகிறது.
ஜூன் 7-ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த மெகா போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசி0சிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் உள்ள விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் தற்போது ஐ.பி.எல். விளையாடி வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது என்ற பதற்றத்திலும் உள்ளது.
இந்த கவுண்டி சீசனில் புஜாரா இதுவரை 4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்து சிறப்பான பார்மில் உள்ளார். சசெக்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற இவர் மொத்தம் 468 ரன்கள் எடுத்தார். இதில் மொத்தம் 63 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புஜாரா முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் புஜாரா அற்புதமாக பேட்டிங் செய்து 8 போட்டிகளில் 109 சராசரியில் 1094 ரன்கள் எடுத்தார். கடந்த ஆண்டு 5 சதங்கள் அடித்தார். 231 ரன்கள் என்ற அபார இன்னிங்சும் இதில் ஒன்று.இந்த கவுண்டி போட்டிகள் நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் தான் WTC இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. WTC இறுதிப் போட்டியிலும் புஜாரா இந்த ஃபார்மை தொடர்ந்தால், இந்தியாவுக்கு ஆயிரம் யானைகள் பலம் கிடைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அத்துடன் ஆஸ்திரேலியாவிடம் சிறப்பான ரெக்கார்டுகளை புஜாரா வைத்துள்ளார். டெஸ்ட்டில் சச்சின், லக்ஷ்மன் மற்றும் டிராவிட் ஆகியோருக்குப் பின் புஜாரா மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2,000 ரன்கள் எடுத்த வீரர். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடித்துள்ளார்.