இந்தியாவில் தோன்றிய அரசர்களின் விளையாட்டான அஷ்டபாதா விளையாட்டிற்கு தமிழில் சதுரங்கம் என்று பொருள். நம் முன்னோர்கள் எட்டுக்கு எட்டு கட்டங்களைக் கொண்ட சதுர வடிவ பலகைக்கு சமஸ்கிருதத்தில் அஷ்டபாதா என்று அழைத்தனர். இந்தியாவில் விளையாடப்பட்ட இந்த அஷ்டபாதா , பாரசீகம் வழியாக மேலைநாடுகளுக்கு பரவியதாக கூறுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். 9ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்து, ஸ்பெயினில் பத்தாம் நூற்றாண்டில் பரவலாக விளையாடப்பட்டுள்ளது சதுரங்கம்.
கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவே இருந்துள்ளது சதுரங்கம். அதன் அடிப்படையில், திருவாரூர் அருகே பூவனூரில் சித்தர் வேடத்தில் வந்து சிவபெருமானே சதுரங்கம் ஆடியதாக உண்டு ஐதீகம். ஆகையால், தமிழ் மண்ணில் சதுரங்கம் எப்போது தோன்றியது என்று தெரியாவிட்டாலும், குப்தர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா முழுவதும் பரவியது சுமார் 6ஆம் நூற்றாண்டில்.
ராஜா, ராணி உள்ளிட்ட ஒவ்வொரு காய்களுக்குமான சக்திகள் வரையறுக்கப்பட்டு, 1851ஆம் ஆண்டு முதன்முதலில் லண்டனில் நடைபெற்றது உலகளவிலான செஸ் போட்டி. அப்போது சாம்பியன் பட்டம் வென்றவர் ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ப் ஆண்டெர்சன். அடுத்த நூற்றாண்டில் இங்கிலாந்தை அடைந்த செஸ் விளையாட்டு, ஐரோப்பிய நாடுகளில் காலூன்றிய காலம் 16ஆம் நூற்றாண்டு. அந்த காலக்கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு மாறுதல்களுடன் பலரின் மனதை ஆட்கொண்டது சதுரங்கம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், 1924, ஜூலை 20ல் தொடங்கப்பட்டது உலக சதுரங்க கூட்டமைப்பு. இந்த நாளையே இன்று வரை உலக சதுரங்க நாளாக கொண்டாடுகிறோம் நாம். செஸ் எப்படி விளையாட வேண்டும் என்ற புத்தகத்தை முதன்முதலில் எழுதியவர் ஸ்பெயினைச் சேர்ந்த லூயிஸ் ராமிரேஸ். அவர் சொல்லிக் கொடுத்த வழிமுறைகளால் இன்றளவும் போற்றப்படுகிறது அவரது Repetition of Love and the Art of Playing Chess என்ற புத்தகம்... தலா ஒரு ராஜா, ராணி, 2 யானை, குதிரை, மந்திரி மற்றும் 8 சிப்பாய்கள் என 16 காய்களுடன் ஆடும் விளையாட்டாக மாறியுள்ளது செஸ். இருவர் விளையாடும் விளையாட்டில் ஒருவருக்கு வெள்ளை, மற்றொருவருக்கு கருப்பு என்ற வரைமுறையும் அப்போதுதான் வகுக்கப்பட்டது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
யானைப்படை, குதிரைப்படை என ஏராளமான படைகளுடன் உலகத்தையே வெற்றி கொண்டவர்கள் நம் மன்னர்கள். அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கவும், போர் வியூகங்களை வகுக்கவும் அவர்கள் பயன்படுத்தியது சதுரங்கம். கீழடியில் கிடைத்துள்ள தந்தத்தினால் ஆன சதுரங்க காய்களே அதற்கு ஆணித்தரமான ஆதாரம். உலகம் முழுவதும் சதுரங்கம் விளையாடப்பட்டாலும், அதில் முடிசூடா மன்னர்களாக திகழ்வது நமது இந்தியர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்களின் ஆதிக்கமே அதிகம்.