அனைவருக்கும் உடலில் அல்லது முகத்தில் எங்காவது ஒரு மச்சம் இருக்கும். நமது சருமத்தில் உள்ள செல்கள் ஒரு கொத்தாக வளர்ந்து தோல் முழுவதும் பரவாமல் ஒரு இடத்தில் குவிந்திருப்பதுதான் மச்சம் என்று அறிவியல் பூர்வமாகக் கூறப்படுகிறது. இந்த செல்கள் மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், உங்களுக்கு ஜோதிட நம்பிக்கை இருந்தால் உங்கள் மச்சத்துடன் உங்கள் குணாதிசயங்களுக்கும் ஒத்துப்போகலாம். எப்படி என்று பார்க்கலாம்.
நெற்றியில் மச்சம் : உங்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் அது செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. அந்த மச்சமானது உங்கள் நெற்றியின் நடுவில் இருந்தால், அது ஞானம் என்று பொருள். வலது பக்கத்தில் இருந்தால், அந்த நபர் பிசினஸில் அல்லது திருமண வாழ்க்கையில் ஒரு சிறந்த துணையை கொண்டிருப்பார்கள். ஆனால் இடது புறத்தில் இருந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வருவது சிரமம்.
உதடு : உதடுகளுக்கு அருகில் மச்சம் இருந்தால், நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் நபர் என்று அர்த்தம். மேல் உதட்டின் வலது அல்லது இடது மூலையில் மச்சம் இருந்தால், நீங்கள் ஒரு சிறந்த உணவுப் பழக்கம் உடையவர் என்று அர்த்தம். அதேபோல் வாழ்க்கையில் மிகச்சிறந்த விஷயங்களைத் தேடி தேடி செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருப்பார்கள். மச்சம் உதடுகளில் இருந்தால், அவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உதடுகளுக்குக் கீழே இருந்தால், உங்களுக்கு நடிப்பு மற்றும் நாடகக் கலைகளில் ஆர்வம் இருக்கலாம் என்று அர்த்தம்.
தாடை : இந்த இடத்தில் மச்சம் இருந்தால் அக்கறை மற்றும் பாசமாக இருப்பார்கள். அதோடு இவர்கள் பிடிவாதம், செயலில் உறுதித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். வலது பக்கத்தில், மச்சம் இருந்தால் ராஜதந்திர தன்மையைக் குறிக்கும், அதே சமயம் இடது பக்கத்தில் இருந்தால் அவர்கள் எதையும் நேரடியாக அணுகக்கூடியவராக இருப்பார்கள்.
கன்னம் : கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் நேர்மையான, புத்திசாலித்தனமான நபர் என்று அர்த்தம். அத்தகைய நபர்கள் பொருள் இன்பங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். வலதுபுற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் குடும்பத்தை கவனிப்பதில் பொறுப்பானவராக இருப்பார்கள். ஆனால் இடதுபுறத்தில் இருந்தால், நீங்கள் உள்முக சிந்தனையாளராகவும், கொஞ்சம் திமிர்பிடித்தவராகவும் இருக்கலாம்.
மூக்கு : மச்சமானது மூக்கில் இருந்தால் உயர்ந்த சுய மரியாதையுடன் வாழ்வார்கள். இந்த நபர் ஒரு நேர்மையான நண்பர், மிகவும் கடின உழைப்பாளி. ஆனால் அந்த மச்சம் மூக்கின் நுனியில் இருந்தால், அவர் மிகவும் குறுகிய மனநிலையுள்ளவர் என்று அர்த்தம். மூக்கின் வலது பக்கத்தில் இருந்தால் உணர்ச்சிவசப்படுபவராகவும், மேலும் பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார்கள். அதேசமயம், மூக்கின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் போராளிகளாக இருப்பார்கள்.