நாம் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும் வாஸ்துப்படி வைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், வாஸ்து குறைபாடு காரணமாக பல அசுப நிகழ்வுகளை நாம் சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நமது வீடுகளில் நாம் வைக்கப்படும் கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும் என உங்களுக்கு தெரியுமா?. கண்ணாடி என்பது முகத்தைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, இது வீட்டின் ஒட்டுமொத்த அழகை மேம்படுத்தவும் பயன்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் கண்ணாடிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. எனவே, கண்ணாடியை எந்த திசையில் வைத்தால் நல்ல பலன்களை பெறலாம் என பார்க்கலாம்.
படுக்கையறையில் கண்ணாடியை தவறாக வைப்பது எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டுவரும். உங்கள் வீட்டில் இருக்கும் சக்தியை மாற்றும் குணம் கண்ணாடிக்கு உண்டு. அதை வைத்திருக்கும் திசை மற்றும் நிலை தவறாக இருந்தால், எந்த நேரத்திலும் எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டிற்குள் நுழையலாம். சரியாக வைத்திருந்தால், அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்ல பலனை கொடுக்கும். எனவே, கண்ணாடியை சரியாக வைப்பதற்கு அடிப்படை வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது முக்கியம்.
படுக்கையறை ஒரு தனிப்பட்ட இடம். இங்கு தான் நீங்கள் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நல்ல தருணங்களைச் செலவிடுவதற்கோ அல்லது குழந்தைகளுக்குக் கதைகள் கூறுவதற்கோ உங்கள் படுக்கையறைக்கு நேர்மறை ஆற்றல் தேவை. எனவே, படுக்கையறையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்கவும். ஒருவேளை, உங்கள் அறையில் டிரஸ்ஸிங் டேபிள் இருந்தால், அதை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்க படுக்கையில் படுத்திருக்கும் போது உங்கள் உருவம் அதில் பிரதிபலிக்க கூடாது.
கண்ணாடி வைக்க சரியான உயரம் : வீட்டில் கண்ணாடி வைப்பதற்கு சரியான உயரம் தரையிலிருந்து சுமார் 4-5 அடி உயரம் சிறந்தது. ஆனால், மேஜை அல்லது தரையில் வைப்பதை தவிர்க்கவும். அதே போல, படிக்கும் மேஜைக்கு அருகில் கண்ணாடி வைக்க கூடாது. ஏனென்றால், இது மோசமான அதிர்வுகளைத் தரும். இதனால், உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க முடியாமல் போகலாம்.
என்ன வடிவத்தில் கண்ணாடி வைத்தால் சிறந்தது? : வீட்டில் வைப்பதற்கு செவ்வக அல்லது சதுர கண்ணாடியை தேர்வு செய்வது நல்லது. வட்டம் அல்லது ஓவல் வடிவ கண்ணாடிகளை முடிந்தவரை தவிர்க்கவும். ஏனெனில், அவை உங்கள் வீட்டிற்கு நேர்மறையை கொண்டு வராது. இதனால், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியம் தொடர்பான குறைப்பாடுகளை சந்திப்பார்கள்.