நாம் அனைவரும் விலை மதிப்புள்ள ரத்தினக் கற்களை விரும்புகிறோம்! விலையுயர்ந்த வைரம் முதல் பவழம் வரை அழகாக அலங்கரித்துக் கொள்வதற்காக அணிவதைத் தவிர, ரத்தினக் கற்கள் தோஷங்களைப் போக்கும், குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சில கிரகங்களால் உண்டாகும் தீங்குகளைக் கட்டுப்படுத்தவும், ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும், ஒரு சில இரத்தினக்கற்களை எப்போதும் ஒன்றாக அணியக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் இது குறித்த தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்...
நீலக்கல் (நீல சஃபையர்) : ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த ரத்தினங்களில் ஒன்றாக நீல சஃபையர் கருதப்படுகிறது. நீல ரத்தினங்களை ஆட்சி செய்வது சனி கிரகம் (சனி பகவான்). சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகியவை இதன் பகை கிரகங்கள். மாணிக்கம், முத்து மற்றும் சிவப்பு பவழ ரத்தினங்களுடன் நீலக்கல் ரத்தினத்தை ஒருபோதும் அணியக்கூடாது. நீல ரத்தினமானது அதன் நிலையற்ற தன்மையின் காரணமாக பெரும்பாலும் தனியாகவே அணிய வேண்டும்.
மாணிக்கம் : மாணிக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. சூரியனின் எதிரிகள் சுக்ரன் மற்றும் சனி ஆகும். எனவே, அவற்றுடன் தொடர்புடைய அனைத்துமே ஒரு போரை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை. மாணிக்கத்தை ஒருபோதும் வைரம் மற்றும் நீலக்கல்லுடன் அணியக்கூடாது. அவ்வாறு செய்தால், அணிபவரின் வாழ்க்கையில் தோஷத்தை ஏற்படுத்தி, அவருக்கு மனச்சோர்வையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும்.
மரகதம்: மரகதம் புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த மரகத கற்கள், அணிபவர்களுக்கு அன்பு, பாசம், மொழி வளம், மற்றும் நல்வாழ்வை வழங்குகிறது என்று கூறப்படுகிறது. புதனின் எதிரிகள் சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகும். மரகதத்தை எப்போதும் முத்து மற்றும் சிவப்பு பவழத்துடன் அணியக்கூடாது. அவ்வாறு அணிந்துக்கொள்வது அணிபவருக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் என்றும், அவரது உடல்நலத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
முத்து : முத்து அழகாக இருப்பது மட்டுமல்லாமல், அணிந்திருப்பவருக்கு இதமான மனதையும், அமைதியையும் வழங்குவதாக அறியப்படுகிறது. மென்மையான ரத்தினம் என்று அழைக்கப்படும் முத்து சந்திரனால் ஆளப்படுகிறது சந்திரனின் எதிரிகள் ராகு மற்றும் கேது என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களும் கோமேதகம் மற்றும் வைடூரியத்தின் அதிபதிகளாக உள்ளன. இந்த கற்களை முத்துடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
சிவப்பு பவழம்: பவழத்தின் ஆளும் கிரகம் செவ்வாய். எனவே, பவழம் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவும். செவ்வாய் பலம் பெற, திருமணம் நடக்க என்று செவ்வாய் காரகத்துக்கு பவழம் அறிய பரிந்துரை செய்யப்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருக்கும் யாரும் இந்த ரத்தினத்தை அணியலாம். செவ்வாய் கிரகத்தின் எதிரிகள் புதன், சுக்கிரன், சனி, கேது மற்றும் ராகு என்று கூறப்படுகிறது. இந்த கிரகங்களைக் குறிக்கும் கற்களான மரகதம், வைரம், நீலம், வைடூரியம் மற்றும் கோமேதகம் ஆகியவற்றை பவழத்துடன் இணைத்து அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
வைரம்: பெண்களுக்கு மிகவும் பிடித்தமான, பலராலும் மிகவும் விரும்பப்படும் மற்றும் விலையுயர்ந்த ரத்தினங்களில் ஒன்று வைரம். வைரமானது சூரியன், சந்திரன் மற்றும் குரு ஆகியவைகளின் பகை கிரகமான சுக்ரனால் ஆளப்படுகிறது. மாணிக்கம், முத்து மற்றும் புஷ்பராகத்துடன் வைரத்தை எப்போதும் சேர்த்து அணியக்கூடாது. அவ்வாறு செய்வது, அணிபவருக்கு தீங்கு விளைவிக்கும், உடலை பலவீனப்படுத்தும் மற்றும் நோய் ஏற்படலாம்.
கனக புஷ்பராகம்: வேத ஜோதிடத்தின் படி, புஷ்பராகம் உங்களின் நிதி ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காண உதவுகிறது. இந்த ரத்தினத்தை ஆளும் கிரகம் குரு. குருவின் பகை கிரகங்களான புதன், சுக்ரன் மற்றும் சனி, முறையே மரகதம், வைரம் மற்றும் நீலம் என்ற கற்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை புஷ்பராகத்துடன் சேரத்து அணிவதைத் தவிர்க்கவும்.
கோமேதகம்: கோமேதகம் சக்திவாய்ந்த ராகுவால் ஆளப்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகு வலுவாக இருந்தால், இந்த ரத்தினம் உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். இந்த கிரகத்தின் எதிரிகள் சூரியன் மற்றும் சந்திரன் ஆகும். சூரியன் மற்றும் சந்திரனைக் குறிக்கும் ரத்தினக்கற்கள் மாணிக்கம் மற்றும் முத்து. மாணிக்கம் மற்றும் முத்துவுடன் இந்த கோமேதகத்தை யார் அணிந்தாலும், அவர்கள் மீது நிழல் கிரகமான ராகு, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.