அதன்பின், ராஜமகேந்திரன் சுற்றை வலம் வந்து, நாழிக்கேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக்கொடி மரத்தை சுற்றினார். துரைப்பிரகாரம் வழியாக சென்ற நம்பெருமாள், விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேத விண்ணப்பங்களை கேட்டருளினார். காலை, 4.46 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
அமைச்சர் சேகர் பாபு, ஆட்சியர் பிரதீப் குமார், காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, சந்திர புஷ்கரணி குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூந்தட்டிகள் வழியாக, ஆலிநாடான் திருச்சுற்றில் உள்ள மணல்வெளி வழியே அகளங்கன் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில், காலை, 5 மணிக்கு நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதன்பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு காலை, 8 மணிக்கு எழுந்தருளினார். அங்கிருந்தபடியே நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இன்றிரவு (2ம் தேதி), 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் அதிகாலை, 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
சொர்க்கவாசல், இன்று (2ம் தேதி) முதல், 7ம் தேதி வரை, பகல், 1 மணி முதல், இரவு, 8 மணி வரை திறந்திருக்கும். 8ம் தேதி மாலை, 4 மணி முதல், இரவு, 8.30 மணி வரை திறந்திருக்கும். 9ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான, 2ம் தேதி முதல், ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான, 8ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான, 9ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான, 11ம் தேதி தீர்த்தவாரியும், 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது.