மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும் பொழுது, சனிபகவான் ஒரு ராசியில் குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் முதல் 3 ஆண்டு காலங்கள் சஞ்சரிப்பதால் நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகச் சனி உள்ளிட்ட காலகட்டங்கள் ஒரு சில நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு, அவர்களின் ஜனனகால ஜாதகத்தில் சனி பலவீனமாகவோ அல்லது பகை வீட்டில் இருந்தாலோ சனியின் விளைவுகள் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைப்பதற்கு மிக எளிய விஷயங்களைச் செய்தால் போதும். சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் ஜாதகத்திலேயே சனி பலவீனமாக இருப்பவர்கள் பின்வரும் விஷயங்களை செய்வதன் மூலம் சனி எதிர்மறையான தாக்கத்தில் இருந்து எளிதில் விடுபடலாம், தடைகள், தாமதங்கள், ஆபத்துகள் விலகும்.
சனி கிரகம், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், வறுமை, கடைநிலை ஊழியர்கள், உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள், ஆகியவற்றைக் குறிக்கும். எனவே, இவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வது மிகச் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தும்.ஆதரவற்றவர்கள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், யாசகர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் இயன்ற அளவுக்கு பணமாகவோ, பொருளாகவோ தானம் செய்யலாம். உதாரணமாக, செருப்பு, குடை, ஆடைகள் போன்றவற்றை வாங்கித் தரலாம்.உடல் உறுப்புகளில் சனி முட்டி மற்றும் கால்களைக் குறிக்கும். முதியோர்களுக்கு மருந்துகள் வாங்கித் தரலாம் அல்லது அதற்கு பணம் கொடுத்து உதவலாம். தேவைப்படுவர்களுக்கு காலணிகள் வாங்கித் தரலாம்.குளிர்ச்சியான பகுதிகளில் இருப்பவர்கள், போர்வைகள் வாங்கி தானம் செய்யலாம். வசதியற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், கல்விக் கட்டணம் உள்ளிட்டவற்றில் உங்களால் இயன்றதை செய்யலாம்.
சனி என்பது நேர்மை, உண்மை, கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும் கிரகம். ஊழியர்களை ஏமாற்றக் கூடாது.ஒரு விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டு அதை நிறைவேற்றுவதை நோக்கி செயல்படுங்கள்.இலவசமாக யாரிடமும் இருந்து மதுபானம் பெற வேண்டாம்.சனியின் தாக்கம் குறைய, உடல் உழைப்பு மிகவும் முக்கியம். உடல் உழைப்பு இல்லாத வேலையில் ஈடுபட்டால், தினமும் நடைபயிற்சி ஆவது மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு நடக்கிறீர்களோ அந்த அளவுக்கு சனியின் தாக்கம் குறைந்து, நற்பலன்கள் கிடைக்கும்.
ஜனனி கால ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது சனியின் எதிர்மறையான தாக்கம் இருப்பவர்கள், தொடர்ந்து விநாயகர் மற்றும் சிவபெருமானை வணங்கி வந்தால் தாக்கம் குறையும்.சிவபெருமானுக்கு வில்வ மர இலைகள் மற்றும் வன்னி மர இலைகளால் மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.