தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இக் கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழா பூச்சொரிதல் விழா ஆகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி , பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
இந்தாண்டில் 13ம் தேதியான நேற்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீது பூக்களை கொண்டு வந்த கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை கூடைகளில் தலையில் சுமந்தும், கையில் ஏந்தி வந்தும் அம்மனு சாத்தினர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான சமயபுரம் நெ.1 டோல்கேட்டிலிருந்து திருச்சி சென்னை மற்றும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மற்றும் கோயிலைச்சுற்றியும் தற்காலிக குடிநீர் வசதிகள், நவீன நடமாடும் கழிவறை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்துள்ளதாக அதன் செயல் அலுவலர் தெரிவித்தார்.