ஜோதிடத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் கிரகமாக சனி கருதப்படுகிறது. சனி நீதியின் கடவுள் என்று போற்றப்படுகிறார். சனி ஒருவரின் கர்மவினைக்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்களை தருவார். அப்படிப்பட்ட சனியை குளிர்விக்க ஜோதிடத்தில் பல வழிகள் உண்டு. நீதிமானான சனிபகவான், ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து பாடங்களையும் கற்றுத் தரக்கூடியவர். அவர் நினைத்தால் ஏற்றமும் தருவார். ஆணவச் சிந்தனையில் உள்ளவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத் தருவார். சனிபகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு சில பரிகாரங்கள் கட்டாயமாகும்.
ஜோதிட சாஸ்திரப்படி மிதுனம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் சனிக்கு தனி கவனம் உண்டு. இந்த ராசிக்காரர்கள் சனியின் கோபத்தை உண்டாக்கும், மோசமான பலன்களைத் தரும் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். இந்த வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிக நன்று. சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும்.