தலைவாசல் அருகே நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ காமநாதீஸ்வரர் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த் திருவிழா நடைபெற்றது. பொதுமக்களின் பங்களிப்புடன் பல இலட்சரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய தேரில் ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ காமநாதீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் சுவாமிகள் எழுந்தருளினார்.
கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி ஜெயநகரத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. நான்கு முக்கிய வீதிகளின் வழியாக மக்களின் ஆட்டம் பாட்டத்துடன் மங்கள இசை முழங்க தேர் வலம் வந்தது. ரத வீதிகளில் கூடிய மக்கள் தேங்காய் உடைத்தும் அர்ச்சனை செய்தும் முருகனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பங்குனி திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் சட்டத்தில் இழுக்கப்பட்டு நிலையை வந்து அடைந்தது. இரண்டாவதாக வைரத் தேர் என்று அழைக்கப்படும் பெரிய தேரில் கழுகாசல மூர்த்தி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ நடன காளியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவையொடி தீமிதி திருவிழா நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடன காளியம்மன் தீக்குழி அருகே எழுந்தருளிய நிலையில், 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.