நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை என இந்த ஒன்பதையும் நவ தானியங்கள் என்பர். இவையே நவ கிரகங்களுக்கு உரிய தானியங்களும் கூட... பூஜைகள், சடங்குகள் போன்றவற்றின் சமயத்தில் இவை நவ கிரகங்களுக்கு படைக்கப்படுகிறது. நவதானியங்கள் என்பது பொதுவாக ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியங்கள் என்றபடி வகைப் படுத்தப்படுகிறது.
கோதுமை : இது சூரிய பகவானின் தானியம் ஆகும். எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்து வர நன்மைகள் நம்மை வந்து சேரும். குறிப்பாக, வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஆண் குழந்தை எதிர்பார்ப்பவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறையாக தொழில் செய்பவர்கள் போன்றோர் சூரியனுக்கு உரிய கோதுமையை ஏதேனும் ஒரு விதத்தில் ஞாயிற்றுக் கிழமை தானம் செய்வது சிறப்பு.
நெல் : இது சந்திர பகவானின் தானியம் ஆகும். சிலர் பச்சரிசியைக் கூட சந்திர பகவானின் தானியம் என்றே சொல்வர். அந்த வகையில் சொந்த ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள்... திங்கட்கிழமையில் பச்சரிசியை தானம் செய்வது சிறப்பு. அதேபோல... அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், வாகனம் சம்பந்தப்பட்ட ( டிராவல்ஸ் ) தொழில் செய்பவர்கள், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், கதை, கவிதை, இலக்கியம் படைப்பவர்கள் (போன்றோர்) பச்சரிசியை திங்கட் கிழமையில் தானம் அளிப்பது சிறப்பு. தவிர, அடிக்கடி பணி இடமாற்றத்தை சந்திப்பவர்கள் கூட பச்சரிசியை தானம் செய்வது சிறப்பு.
துவரை : 'துவரை' இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும். கட்டிடத் தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் வியாபாரம் செய்பவர்கள், செங்கல் சூளை, கேட்டரிங் தொழில் செய்பவர்கள், மருந்துக் கடை வைத்திருப்பவர்கள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள், ஜேசிபி, டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் என இவர்களெல்லாம் துவரை கலந்த உணவுகளை செவ்வாய்க் கிழமைகளில் தானம் செய்து வர நன்மை பெருகும். தொழில் விருத்தி ஆகும்.
பச்சைப்பயறு : 'பச்சைப்பயறு' இது புதனின் தானியம் ஆகும். ஜாதகத்தில் புதனால் பாதிக்கப்படுபவர்கள்... பச்சைப் பயிறு சுண்டல் செய்து புத பகவானுக்கு நிவேதனம் செய்து... தானம் அளிப்பது சிறப்பு. மேலும், ஆடிட்டர்கள், கணக்காளர்கள், வங்கி பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், மனை வியாபாரம் செய்பவர்கள், நரம்பு மற்றும் தோல் மருத்துவர்கள், அழகு நிலையம் நடத்துபவர்கள், கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கமிஷன் மண்டி தொழில், ஏஜென்சி தொழில், தரகுத் தொழில், திருமணத்தரகர்கள், மளிகைக் கடைக்காரர்கள் என இவர்கள் பச்சைப்பயறு தானங்களை புதன் கிழமைகளில் செய்து வர நன்மை அளிக்கும்.
கொண்டைக்கடலை : இது குரு பகவானின் தானியம் ஆகும். இதனை வியாழக் கிழமைகளில் குரு பகவானுக்கு நிவேதனம் செய்து தானம் அளிப்பது நன்மை தரும். இதனால் குரு அருள் சித்திக்கும். திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார் குரு. குறிப்பாக, பேச்சைத் தொழிலாக கொண்டவர்கள், உபந்யாசம் செய்பவர்கள், வட்டித்தொழில் செய்பவர்கள், அடகுத் தொழில் செய்பவர்கள், சிட்பண்ட், கிளப், தவணை முறை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வங்கிப் பணியாளர்கள், கல்வியாளர்கள், உபதேசத் தொழில் செய்பவர்கள் என இவர்களெல்லாம் வியாழன் தோறும் கொண்டைக்கடலை தானம் செய்துவர, குருவின் அருள் பார்வை கிடைக்கும்.
மொச்சை : இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும். சொந்த ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சரி இல்லாதவர்கள், திருமண வாழ்க்கையின் பிரச்சனைகள் அதிகம் இருப்பவர்கள், கலைத்துறையை சார்ந்தவர்கள், ஆபரணக்கடை, ரெடிமேட் கடை, கவரிங் கடை, வளையல் பொட்டு போன்ற பெண்கள் தொடர்புடைய கடை நடத்துபவர்கள், வெள்ளிப் பொருட்கள், ஆடம்பரப் பொருள் விற்பனை, அழகு நிலையம் நடத்துபவர்கள் என இவர்களெல்லாம் வெள்ளிக் கிழமைகளில் மொச்சை தானம் தர செல்வம் பெருகும் தொழில் மேன்மை அடையும்.
கருப்பு எள் : இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, ஜென்மச் சனி ஆகிய சனியினால் அல்லல் படுபவர்கள், குறிப்பாகத் தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர்கள், சேவை சார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை செய்பவர்கள், காலணிக் கடை நடத்துபவர்கள், இரும்புத் தொழில் மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்பவர்கள், கால்நடை வளர்ப்பு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சாலைப் பணியாளர்கள், இவர்களெல்லாம் எள் கலந்த உணவை சனிக் கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்.
உளுந்து : இது ராகு பகவானின் தானியம் ஆகும். ராகு தோஷம் இருப்பவர்கள், குறிப்பாக அயல்நாட்டு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதித் தொழில், சூதாட்ட விடுதி, மது விற்பனை, மால் போன்ற மல்ட்டி காம்ப்ளக்ஸ் தொழில் செய்பவர்கள், சூப்பர் மார்க்கெட் தொழில் செய்பவர்கள், ஏஜென்சி, இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்பவர்கள் என எல்லோரும் உளுந்து வடை அல்லது உளுந்தால் செய்யப்பட்ட பலகாரங்களை சனிக் கிழமையில் தானம் செய்ய அளப்பரிய நன்மைகளைப் பெறலாம்.
கொள்ளு : இது கேது பகவானின் நவ தானியம் ஆகும். கேதுவால் ஜாதகத்தில் பாதிக்கப்படுபவர்கள்... கொள்ளில் உணவுகள் தயாரித்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும். மற்றபடி... ஆன்மிகம் தொடர்புடைய தொழில் செய்பவர்கள், இறை சம்பந்தபட்ட கடை, பூஜை மற்றும் படக்கடை, உபந்யாசம் - புரோகிதம் செய்பவர்கள், ஆன்மீகச் சுற்றுலா ஏற்பாட்டாளர், கைடு என்னும் வழிகாட்டி தொழில் செய்பவர்கள், உளவுத்துறை, தூதரகப் பணி, துப்பறிவாளர்கள், கைரேகை நிபுணர், டிடெக்டிவ் ஏஜென்சி, ஜோதிடர்கள் என இவர்களெல்லாம் கொள்ளு உணவை தானம் தர நிம்மதியான வாழ்வும், வளமான வாழ்க்கையும் அமையும்.