ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்தமான பூ இருக்கும். தாமரை மலரால் மட்டுமே லட்சுமி தேவியை பூஜை செய்கிறார்கள். கிருஷ்ணருக்கு துளசி உகந்ததாக உள்ளது. விநாயகருக்கு அருகம்புல் என்றால் மிகவும் பிடிக்கும். அதுபோலவே சிவபெருமானுக்கும் பல மலர்கள் பிடிக்கும். அவை என்னென்ன மலர்கள் என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
அரளி பூ: சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பூவை வைத்து சிவனை வழிபடலாம். வெள்ளை அரளி மலரை வைத்து சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்தமான மனைவி கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை.
சித்திரை மாதத்தில் சிவ வழிபாடு செய்யும்போது, பலாசம் எனும் ஒருவகை மலரைக் கொண்டு அர்ச்சித்து வழிபடுவது குடும்பத்தில் ஒற்றுமையையும் நிம்மதியையும் கொடுக்கவல்லது என்பார்கள். வைகாசி மாதத்தில் புன்னையும் ஆனி மாதத்தில் வெள்ளெருக்கும் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். ஆடி மாதத்தில் அரளி சார்த்தி, சிவனை வழிபடுவது சிறப்புக்கு உரியது. ஆவணி மாதத்தில் செண்பக மலர்கள் கொண்டு அர்ச்சிப்பதும் அலங்கரிப்பதும் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதத்தில், கொன்றைப் பூக்களும் ஐப்பசி மாதத்தில் தும்பைப் பூக்களும் கொண்டு சிவலிங்கத் திருமேனியை அர்ச்சித்து வழிபட்டால், தொழில் ஸ்தானமும் உத்தியோக ஸ்தானமும் வலுப்பெறும். கார்த்திகை மாதத்தில் கத்திரிப்பூவும் மார்கழி மாதத்தில் பட்டி எனும் ஒருவகைப் பூவும் கொண்டு சிவபெருமானுக்குச் சூட்டி வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். தை மாதத்தில், சிவபெருமானுக்கு தாமரை மலர்கள் கொண்டு அலங்கரிப்பதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லது .