இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2023 மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்திரை பெளர்ணமி அன்று நடைபெறுகிறது. சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியன் - சந்திரன் இடையே ஒரே நேர் கோட்டில் பூமி வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால், அது மறைக்கப்படும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கிறோம். வரும் மே 5 ஆம் தேதி நடைபெறும் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் என கூறப்படுகிறது. நடைபெற உள்ள சந்திர கிரகணம் குறித்து உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
சந்திர கிரகணம் என்றால் என்ன? : சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதை தான் சந்திர கிரகணம் என்கிறோம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும் போது, பூமியின் நிழல் நிலவின் மீது படுகிறது. இதனால் நிலவின் ஒளி முழுமையாக தடுக்கப்படுவதால் முழு, பகுதி மற்றும் பெனும்பிரல் கிரகணங்கள் நடைபெறுகிறது.
2023-யில் சந்திர கிரகணம் எப்போது? : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மே மாதம் 5 ஆம் தேதி புத்த பூர்ணிமா அன்று நடைபெற உள்ளது. Timeanddate.com படி, இந்தியாவில் மே 5 அன்று காலை 10:11 மணிக்கு தொடங்கி, மதியம் 12:22 மணிக்கு உச்சம் பெறுகிறது. பிற்பகல் 02:31 மணிக்கு நிறைவடையும். வரவிருக்கும் கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 18 நிமிடங்கள் ஆகும்.
சந்திர கிரகணம் எவ்வளவு காலம் நீடிக்கும்? : ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தின் காலம் 4 மணி, 18 நிமிடங்கள் ஆகும். மே 5 ஆம் தேதி இரவு 8:44 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:00 -க்கு முடிவடையும். பெனும்பிரல் சந்திர கிரகணம் நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் பகுதி சந்திர கிரகணம் தோராயமாக 236 நிமிடங்கள் நீடிக்கும். மறுபுறம், முழு சந்திர கிரகணம் பொதுவாக 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும். எனவே, கிரகணத்தின் காலம், இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
சந்திர கிரகணத்தின் போது சாப்பிடலாமா? : கிரகணத்தின் போது சாப்பிடுவது தவறு என்று ஜோதிடம் கூறுகிறது. சந்திர கிரகணத்தின் போது சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று கூறப்படுகிறது. மேலும், கிரகணம் சக்திவாய்ந்த புற ஊதா கதிர்களின் உமிழ்வை வெளியிடுகிறது. இது சமைத்த உணவை பாதிக்கிறது. இதனால் உடலுக்கு பல தீங்கு ஏற்படும். எனவே தான், கிரகண காலத்தில் சாப்பிடுவது மற்றும் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறப்படுகிறது. கிரகண நேரத்தில் உணவு மற்றும் தண்ணீரில் துளசி இலைகளை இடுவது நல்லது.
சந்திர கிரகணத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? : ஜோதிடர்களின் கூற்றுப்படி, தசை வளர்ச்சி மற்றும் உறுதிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் நமது உடலின் கப தோஷம் கிரகணத்தின் போது சமநிலையின்மையைக் கொண்டுள்ளது. ஏற்றத்தாழ்வுகளால் தோல் பிரச்சினைகள், முகப்பரு, பருக்கள் மற்றும் வயதானதற்கான ஆரம்ப அறிகுறிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், இந்த கட்டுக்கதைக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
கிரகணத்தின் போது வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க, பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது பொதுவான பரிந்துரை. இருப்பினும், சூரியனைப் போல சந்திரனின் கதிர்கள் வெறும் கண்ணுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மேலும், நாசாவின் கூற்றுப்படி, சந்திர கிரகணத்தைப் பார்க்க பார்வையாளர்களுக்கு சிறப்புக் கருவிகள் எதுவும் தேவையில்லை என தெரிவித்துள்ளது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம்.
சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்? : இந்த சந்திர கிரகணம் உலகில் உள்ள 7 கண்டங்களில் 5 கண்டங்களில் நன்றாக பார்க்க முடியும். அதாவது, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் பார்க்க முடியும்.
சந்திர கிரகணம் தீங்கு விளைவிக்குமா? : ஜோதிடம் மற்றும் பொதுவான நம்பிக்கைகள் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன. ஆனால், நாசாவின் கூற்றுப்படி, சூரிய கிரகணம் போலல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகிறது.