இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன. சிவராத்திரி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை வழிபட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
சோம்நாத் ஜோதிர்லிங்கம், குஜராத்: மேஷம் நெருப்பு வடிவமான ராசி. 12 ஜோதிர்லிங்கத்தில் முதல் ஜோதிர்லிங்கமான சோம்நாத் ஜோதிர்லிங்கத்தை மேஷம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டும். குஜராத் மாநிலம் சோமநாதம் நகரத்தில் உள்ளது பிராபாச பட்டினம். இங்குதான் சோமநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இது ஒரு கடற்கரைத் தலமாகும். சந்திர பகவானின் சாபம் தீர்த்த தலம் இது என்பது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.இந்த கோவில் வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் பலமுறை தாக்கப்பட்டது.
மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம், ஆந்திரப்பிரதேசம்: மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் சிவபெருமானின் இரண்டாவது ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜோதிர்லிங்கம் ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையில் ஸ்ரீஷைல மலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இங்கு நந்தியே மலையாக இருந்து சிவ பெருமானை தாங்குவதாக தல புராணம் தெரிவிக்கிறது. மேலும் விநாயகப்பெருமான், சித்தி-புத்தி ஆகிய இருவரையும் மணம் செய்த சிறப்புமிக்க தலம் இதுவாகும். ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த சிவராத்திரிக்கு இந்த ஜோதிலிங்க ஆலத்திற்கு சென்று வணங்க வேண்டும்.
மஹாகாலேஷ்வரா ஜோதிர்லிங்கம், உஜ்ஜைனி: மஹாகாலேஷ்வர ஜோதிர்லிங்கம் மூன்றாவது ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜோதிர்லிங்கம் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி என்ற நகரத்தில் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில், உஜ்ஜயினியில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. இந்த ஆலயம் 5 அடுக்குகளைக் கொண்ட அழகிய ஆலயமாகும். இங்கு கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியில் வழிபாடு செய்வது விசேஷமான ஒன்று. தோல் வியாதிகளை நீக்கும் கோடி தீர்த்தம் இந்த ஆலயத்தில்தான் இருக்கிறது.மிதுனம் ராசிக்காரர்கள் உஜ்ஜையினியில் உள்ள மகாகாலேஸ்வரரை வணங்க வேண்டும்.
ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம், கந்த்வா: ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக வழிபடப்படுகிறது. இந்த மத வழிபாட்டு நகரம் மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஜோதிர்லிங்கம் நர்மதை நதிக்கரையில் உள்ள ஓமேஷ்வரில் அமைந்துள்ளது. இந்த ஜோதிர்லிங்கத்தைச் சுற்றி ஓடும் மலைகள் மற்றும் ஆறுகளால் இங்கு ஓம் வடிவம் உருவாகியுள்ளது.கடகம் ராசிக்காரர்கள் ஓங்காரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவனை தரிசிக்கலாம்.
கேதார்நாத் ஜோதிர்லிங்கம், உத்தரகாண்ட்:சிவபெருமானின் 5வது ஜோதிர்லிங்கத்தில் கேதார்நாத் ஜோதிர்லிங்கம் வழிபடப்படுகிறது. கேதார்நாத் ஜோதிர்லிங்கம் உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார் இமயமலையில் அமைந்துள்ளது. பத்ரிநாத் சாலையில் கேதார்நாத் ஜோதிர்லிங்கமும் உள்ளது. கேதார்நாத் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3584 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது நாட்டின் மிக உயரமான ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும்.கும்பம் ராசிக்காரர்கள் கேதார்நாத் சிவனை வணங்க வேண்டும். கேதார்நாத் தரிசனம் மகாசிவராத்திரி நாளில் காண முடியாது. காரணம் இந்த கால கட்டத்தில் அங்கு பனியால் சூழப்பட்டிருக்கும். மகாசிவராத்திரி நாளில் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று கேதார்நாதரை நினைத்து தியானம் செய்து பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பீமாசங்கர் ஜோதிர்லிங்கம், மகாராஷ்டிரா: கன்னி ராசிக்காரர்கள் பீமசங்கரரை வணங்க வேண்டும். பீமாசங்கர ஜோதிர்லிங்கம் சிவபெருமானின் ஆறாவது ஜோதிர்லிங்கமாக அறியப்படுகிறது. பீமசங்கர ஜோதிர்லிங்கம் மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் சஹ்யாத்ரி என்ற மலையில் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கான சாலை மிகவும் இயற்கை எழில் நிறைந்தது. உயரமான மலைகளுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியாக இங்கு சென்றடைவதும் பக்தர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.
பாபா விஸ்வநாத் ஜோதிர்லிங்கம், உத்தரபிரதேசம்: தனுசு ராசிகாரர்கள் பாபா விஸ்வநாத் ஜோதிர்லிங்கத்தை வணங்க வேண்டும். இது சிவபெருமானின் 7வது ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் மதத் தலைநகர் என்று அழைக்கப்படும் வாரணாசி நகரில் இந்த ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. உலகின் மிகப் பழமையான நகரமாக கருதப்படும் வாரணாசியில் இந்த ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது.
திரியம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம், மகாராஷ்டிரா: மகரம் ராசிக்காரர்கள் திரியம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்யலாம். திரியம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் சிவபெருமானின் 8வது ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகிறது. இந்த ஜோதிர்லிங்கம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஜோதிர்லிங்கத்திற்கு அருகில் பிரம்மகிரி என்ற மலையும் உள்ளது. கோதாவரி நதியின் மூலமும் இம்மலையில்தான் உள்ளது.
வைத்தியநாத் ஜோதிர்லிங்கம், ஜார்கண்ட்: சிம்மம் ராசிக்காரர்கள் வைத்தியநாதரை வணங்க வேண்டும். வைத்திய நாதர் ஆலயம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேவ்கர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனை வணங்கியே ராவணன் வரங்கள் பல பெற்றான் என்று கூறப்படுகிறது. வைத்தியநாத ஜோதிர்லிங்கத்தை வணங்கினால் ஆண்டு முழுவதும் ஆரோக்கியம் அதிகரிக்கும். சிவராத்திரி நாளில் சிவபுராணத்தை படித்து வைத்தியநாதரை வணங்கலாம். திருமண தடைகள் அகலும். வைத்தியநாத் ஜோதிர்லிங்கம் சிவபெருமானின் ஒன்பதாவது ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகிறது. இந்த ஜோதிர்லிங்கம் ஜார்கண்ட் மாநிலத்தில் சந்தால் பர்கானா அருகே உள்ளது. சிவபெருமானின் இந்த இருப்பிடம் சித்தபூமி என்று புராணங்கள் நம்புகின்றன.
நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம், குஜராத்: நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம் சிவபெருமானின் 10வது ஜோதிர்லிங்கமாக அறியப்படுகிறது. இந்த ஜோதிர்லிங்கம் குஜராத்தின் பரோடா பகுதியில் உள்ள கோமதி துவாரகா அருகே உள்ளது. புராணங்களின்படி, சிவபெருமான் பாம்புகளின் கடவுளாகக் கருதப்படுகிறார். விருச்சிகம் ராசிக்காரர்கள் நாகேஸ்வரர் ஜோதிர்லிங்க தலத்திற்கு சென்று அபிஷேகம் செய்து வணங்கலாம். நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும். பாம்புகளை கழுத்தில் அணிந்த நாகேஸ்வரர் தன்னை நாடி வருபவர்களுக்கு நன்மை செய்பவர். மகாசிவராத்திரி நாளில் நாகேஸ்வரரை நினைத்து வணங்கினால் விபத்து பயம் நீங்கும். சாமந்தி மலரினால் அர்ச்சனை செய்து வணங்கலாம். செல்வ வளம் பெருகும்.
ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம், தமிழ்நாடு: துலாம் ராசிக்காரர்கள் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியை வணங்க வேண்டும். ராமபிரான் வழிபட்ட இந்த ஆலயத்தை துலாம் ராசிக்காரர்கள் வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ராமேஸ்வரத்திற்கு செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று ராமநாதசுவாமியை வணங்கி ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க தடைகள் நீங்கும். ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் சிவபெருமானின் 11வது ஜோதிர்லிங்கமாக கருதப்படுகிறது.
கிருஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம், மகாராஷ்டிரா: மீனம் ராசிக்காரர்கள் வணக்க வேண்டிய ஜோதிர்லிங்க தலம் குஸ்மேஸ்வரர் ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்காபாத் அருகில் உள்ளது. எல்லோராவில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மீனம் அடையாளத்துடன் தொடர்புடையது. மகாசிவராத்திரி நாளில் பாலில் குங்குமப்பூ போட்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சள் நிற பூக்கள், வில்வ இலையால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். குஷ்மேஸ்வர் ஜோதிர்லிங்கம் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக வழிபடப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் சிவபெருமானின் கடைசி ஜோதிர்லிங்கம் இதுவாகும்.